ஹொரணையில் மனைவியின் தாக்குதலுக்குள்ளான கணவன் பலி: இரு பெண்கள் கைது!
ஹொரணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போருவதண்ட பிரதேசத்தில், மனைவியால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் படுகாயமடைந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் உயிரிழந்தவரின் மனைவி உட்பட இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (24) காலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், போருவதண்ட பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபர் நேற்று காலை தனது வீட்டின் அருகிலுள்ள மற்றுமொரு வீட்டின் கதவு மற்றும் ஜன்னல்களைத் தாக்கி, அங்குள்ளவர்களுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதன்போது, அந்த வீட்டில் இருந்த பெண், இது குறித்து தாக்குதல் நடத்திய நபரின் மனைவிக்கு உடனடியாகத் தகவல் வழங்கியுள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மனைவி, அங்கிருந்த மற்றைய பெண்ணுடன் இணைந்து தனது கணவரைத் தாக்கியுள்ளார். இதன்போது துடைப்பம் மற்றும் மரக்கட்டைகளைப் பயன்படுத்தி அவர்கள் பலமாகத் தாக்கியுள்ளமை பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் ஹொரணை பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. உயிரிழந்தவரின் மனைவி மற்றும் அவருக்குத் துணையாக இருந்த மற்றைய பெண் ஆகிய இருவரையும் பொலிஸார் தற்போது கைது செய்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளை ஹொரணை பொலிஸார் முன்னெடுத்து வருவதுடன், சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
