மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், இலங்கையின் எரிபொருள் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் கட்டார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்-தானி ஆகியோருக்கிடையில் முக்கிய தொலைபேசி உரையாடல் ஒன்று இன்று (19) இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடலின் போது, பிராந்தியத்தில் நிலவும் மோதல் சூழல் சர்வதேச எரிபொருள் விநியோகச் சங்கிலியில் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் குறித்து இரு தலைவர்களும் விரிவாக ஆராய்ந்தனர்.
தற்போதைய சவாலான சூழ்நிலையிலும் இலங்கைக்கு தடையின்றி எரிபொருளை வழங்குவதற்கு கட்டார் அர்ப்பணிப்புடன் இருப்பதாக அமீர் உறுதியளித்துள்ளார்.
கட்டாரில் வாழும் மற்றும் பணிபுரியும் பல்லாயிரக்கணக்கான இலங்கையர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு குறித்து அமீர் இதன்போது ஜனாதிபதிக்கு விசேட உத்தரவாதத்தை அளித்தார்.
பிராந்திய அமைதியை நிலைநாட்ட சர்வதேச அளவில் ஒருங்கிணைந்த முயற்சிகள் தேவை என்பதை வலியுறுத்திய ஜனாதிபதி, தற்போதைய நெருக்கடியான தருணத்தில் இலங்கையின் ஆதரவையும் ஒற்றுமையையும் கட்டாருக்குத் தெரிவித்தார்.
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், கட்டாரின் எரிசக்தி நிலையங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம் நிலவுகிறது. இதனைத் தவிர்க்கவே அரசாங்கம் மீண்டும் QR முறையிலான விநியோகத்தை இன்று முதல் கட்டாயமாக்கியுள்ளது.
இந்த இராஜதந்திர பேச்சுவார்த்தையானது, உள்நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடியைக் கையாள்வதில் இலங்கைக்கு ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
