அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் விடுத்த இராணுவ ரீதியான கோரிக்கைகளை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று (20) பாராளுமன்றத்தில் உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.
பாராளுமன்றத்தில் விசேட உரை நிகழ்த்திய ஜனாதிபதி, சர்வதேச விவகாரங்களில் இலங்கை எவ்வித பக்கச்சார்புமின்றி, தனது வெளியுறவுக் கொள்கையில் உறுதியான நடுநிலைமையைப் பேணி வருவதாகக் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி தனது உரையில் பின்வரும் முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்:
ஈரான் கோரிக்கை: ஈரானுக்குச் சொந்தமான மூன்று போர்க்கப்பல்கள் நல்லெண்ண விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வருவதற்கு அனுமதி கோரியிருந்தன.
அமெரிக்கா கோரிக்கை: அமெரிக்கா தனது இரண்டு போர் விமானங்களை (Fighter Jets) மத்தள சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்குவதற்கு அனுமதி கோரியிருந்தது.
இந்த இரண்டு கோரிக்கைகளையும் இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. “இதன் மூலம் நாம் எமது நாட்டின் இறையாண்மையையும் நடுநிலைத் தன்மையையும் சர்வதேச ரீதியில் நிரூபித்துள்ளோம்,” என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க சபையில் தெரிவித்தார்.
மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், இலங்கையின் இந்த முடிவு சர்வதேச அரசியல் அவதானிகளிடையே முக்கியத்துவம் பெற்றுள்ளது. நேற்று (19) ஹைஃபா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், இலங்கை தனது வான் மற்றும் கடல் எல்லைகளை இராணுவத் தேவைகளுக்கு வழங்க மறுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
