சிவனொளிபாத மலைக்கு யாத்திரை சென்ற பெண் ஒருவர், தரிசனம் முடித்துத் திரும்பி வரும் வழியில் இன்று (29) காலை திடீரென உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வழங்கிய தகவல்கள் வருமாறு:
கம்பஹா மாவட்டம், இம்புல்கொட பகுதியைச் சேர்ந்த 65 வயதான தமயந்தி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் தனது குடும்பத்தினருடன் நேற்று (28) இரவு சிவனொளிபாத மலைக்கு தரிசனத்திற்காகச் சென்றுள்ளார்.
இன்று காலை தரிசனத்தை முடித்துக் கொண்டு மலையிலிருந்து கீழே இறங்கி வந்து கொண்டிருந்த போது, மாகிரிதம்ப பகுதியில் வைத்து அவர் திடீரென கடும் சுகவீனமடைந்துள்ளார். அங்கேயே அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் உடலை அவரது உறவினர்கள் மற்றும் அங்கிருந்தவர்களின் உதவியுடன் தற்போது நல்லதண்ணிக்குக் கொண்டு வரும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
நல்லதண்ணிக்கு கொண்டு வரப்படும் உடல், அங்கிருந்து காவு வண்டி (Ambulance) மூலம் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.
வைத்தியசாலையில் உடற்கூற்று பரிசோதனைகள் (Post-mortem) நடத்தப்பட்ட பின்னரே உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை நல்லதண்ணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
