இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதியும், ‘அத்மிரல் ஒப் த ப்ளீட்’ (Admiral of the Fleet) பதவியைப் பெற்றவருமான வசந்த கரன்னாகொட, இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷவை, அடிப்படைத் தகுதிகளில் திருத்தங்களை மேற்கொண்டு இலங்கை கடற்படையில் நிறைவேற்று அதிகாரியாக (Executive Officer) இணைத்துக் கொண்டமை தொடர்பான விசாரணைக்காகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்தி அவரை பிரித்தானியாவின் ராயல் கடற்படை அகாடமிக்கு (Britannia Royal Naval College) பயிற்சிக்காக அனுப்பியமை தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த விவகாரம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக கடந்த ஜூன் 16 மற்றும் 22 ஆகிய திகதிகளில் லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு சமுகமளிக்குமாறு வசந்த கரன்னாகொடவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும் அவர் முன்னிலையாகியிருக்கவில்லை.
இதே குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் கடற்படை லெப்டினன்ட் யோஷித ராஜபக்ஷ கடந்த ஜூன் 17ஆம் திகதி கைது செய்யப்பட்டு, பின்னர் தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான மூன்று தனிநபர் பிணைகளில் விடுவிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
