நுவரெலியாவில் பஸ் விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதங்கள் தவிர்ப்பு
நுவரெலியா நகரில் இன்று காலை தனியார் பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் பெரும் உயிர்ச்சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன.
நுவரெலியா – சாந்திபுரம் வழித்தடத்தில் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த பஸ், பயணிகளை இறக்கிவிட்டுவிட்டு, நுவரெலியா பஸ் தரிப்பு நிலையத்திற்கு அருகிலுள்ள நிறுத்துமிடத்தை நோக்கிப் பின்னோக்கிச் செல்லும்போது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து, கிரிகரி குளத்திற்கு அருகிலுள்ள தலக்கல ஓயாவிற்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
விபத்து இடம்பெற்ற வேளையில் பஸ்ஸில் சாரதியும் நடத்துனரும் மட்டுமே இருந்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் அவர்களுக்கு எவ்விதமான காயங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
