அநுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்
தற்போதைய அரசாங்கத்தின் கீழ் விவசாயிகளுக்கு சிறந்த வாழ்க்கை உருவாக்கித் தரப்படும்
– இந்த அரசாங்கமே நெல் கொள்வனவுக்காக வரலாற்றில் அதிகூடிய தொகையை ஒதுக்கியது
– பல தசாப்தங்களாக கலந்துரையாடப்பட்டு வந்த மல்வத்து ஓயா திட்டம் அடுத்த ஆண்டு ஆரம்பிக்கப்படும்
வடமத்திய மக எள திட்டத்தை விரைவாக முடித்து, மஹகனதராவ வரை நீரைக் கொண்டு செல்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது
– ஜனாதிபதி
67,000 குடும்பங்களின் குடிநீர் விநியோகத்தை உறுதி செய்யும், இலங்கையின் இரண்டாவது பாரிய நீர் திட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்படுகிறது
– அமைச்சர் வசந்த சமரசிங்க
தற்போதைய அரசாங்கத்தின் கீழ் நீர்வழங்கல் துறையில் புதிய மறுமலர்ச்சி
– அமைச்சர் சுசில் ரணசிங்க
அரசாங்கத்தின் வலுவான பேரினப் பொருளாதார கொள்கையின் காரணமாக இலங்கையின் பொருளாதாரம் தற்போது ஸ்திரமடைந்துள்ளது
– இலங்கைக்கான ஜப்பான் தூதுவர்
தற்போதைய அரசாங்கம் விவசாய மக்களைப் பாதுகாக்கும் அரசாங்கமாகும் என்றும், அவர்களுக்கு சிறந்ததொரு வாழ்க்கை, சமூக மதிப்பு மற்றும் கௌரவத்தைப் பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
உர மானியத்தை இரு மடங்காக அதிகரித்தல், டித்வா சூறாவளி காரணமாக சேதமடைந்த பயிர்ச்செய்கை நிலங்களுக்கு வரலாற்றில் மிகக் கூடிய நட்டஈட்டுத் தொகையை வழங்குதல், நெல் கொள்வனவுக்காக வரலாற்றில் அதிகளவிலான நிதியை ஒதுக்குதல், பாரிய அளவிலான நீர்ப்பாசனத் திட்டங்களின் பணிகளை மீண்டும் ஆரம்பித்து பயிர்ச்செய்கை நடவடிக்கைகளுக்குத் தேவையான நீரை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்தமை உட்பட விவசாய மக்களுக்காகக் குறிப்பிடத்தக்க அளவிலான பணிகளை அரசாங்கம் நிறைவேற்றி வருவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
அநுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் இன்று (10) முற்பகல் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனைக் குறிப்பிட்டார்.
அநுராதபுர மாவட்டத்தின் பதவிய, கெபிதிகொல்லேவ, ஹொரவப்பொத்தான மற்றும் கஹட்டகஸ்திகிலிய ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் நிலவும் நீண்டகால சிறுநீரக செயலிழப்பு நோய்க்கு ஒரு தீர்வாக, அப்பிரதேசத்திலுள்ள 67,000 குடும்பங்களுக்கு சுத்தமான மற்றும் பாதுகாப்பான குடிநீரை வழங்கும் நோக்கத்துடன், இலங்கையிலுள்ள ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிலையம் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர்வழங்கல் அமைச்சு மற்றும் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை ஆகியவற்றின் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
1990 ஆம் ஆண்டுக் காலப்பகுதியிலிருந்து இப்பிரதேசங்களில் பரவி வரும் அடையாளம் காணப்படாத சிறுநீரக நோய்க்கு (CKD) சுத்தமான குடிநீர் இல்லாமையே பிரதான காரணம் என்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும், எனவே இத்திட்டம் வெறும் உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி மட்டுமல்லாது, மக்களின் வாழ்வுரிமையை உறுதிப்படுத்துவதாகும் என்றும் ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார்.
இத்திட்டத்திற்கு ஆதரவளித்த ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிலையத்திற்கும், திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர்வழங்கல் அமைச்சு மற்றும் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கும் தனது நன்றியைத் தெரிவித்த ஜனாதிபதி, திட்டப் பணிகளை உரிய காலத்திற்குள் நிறைவு செய்து, அதன் பலன்களை மக்களுக்கு வழங்குவதற்கு அனைவரும் அர்ப்பணிப்புடன் செயல்படுவார்கள் என நம்புவதாகவும் தெரிவித்தார்.
மேலும், வரலாறு நெடுகிலும் நாட்டிற்குள் நீர் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்ட போதிலும், இதுவரையில் சுமார் 60% (42-43 இலட்சம் குடும்பங்கள்) மக்களுக்கு மாத்திரமே சுத்தமான குடிநீர்
வசதி கிடைத்துள்ளது என்பதை இங்கு சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, தற்போதைய அரசாங்கம் 2000 கோடி ரூபா செலவில் 22 குடிநீர் வழங்கல் திட்டங்களின் பணிகளை அடுத்த ஆண்டு ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாகவும், பழைய திட்டங்களை விரிவாக்குவதன் மூலமும் மற்றும் புதிய திட்டங்கள் மூலமும் புதிதாக சுமார் 10 இலட்சம் குடும்பங்களுக்கு புதிய நீர் விநியோகங்களை வழங்குவதற்குத் தேவையான திட்டங்கள் தற்போது தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க,
இந்த விவசாயக் குடியேற்றங்களில் வாழும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டே எமது அரசாங்கம் செயற்படுகிறது. அவர்கள் தற்போது வாழும் நிலையை விட சிறந்ததொரு வாழ்க்கையை அவர்களுக்கு உரித்தாக்கிக் கொடுப்பது எமது பொறுப்பாகும். அதுமட்டுமன்றி, விவசாய மக்களுக்கு தற்போது கிடைத்துள்ள சமூக மதிப்பை விடவும், உயர்ந்ததொரு சமூக மதிப்பையும் கௌரவத்தையும் உரித்தாக்கிக் கொடுப்பது எமது பொறுப்பாகும்.
இந்தப் பிரதேசங்களில் வாழும் மக்கள் சுழற்சி முறையிலான வறுமையின் காரணமாகப் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றார்கள். இந்தச் சுழற்சி முறையிலான வறுமையிலிருந்து அவர்களை மீட்டெடுப்பதற்கு மிக முக்கியமானதாக இருப்பது கல்வியாகும். எனவேதான், கல்வியில் ஒரு பாரிய மாற்றத்தை ஏற்படுத்துவதற்கெனத் தேவையான நடவடிக்கைகளை நாங்கள் எடுத்துள்ளோம். அதில், குறிப்பாக புதிய கல்விச் சீர்திருத்தங்களை அடுத்த ஆண்டு முதல் 6 ஆம் வகுப்பிலிருந்து ஆரம்பிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. எமது பிள்ளைகள் உலகிலுள்ள நவீன அறிவை உள்வாங்கிக் கொள்ளக்கூடிய வகையில் கல்வித்துறை மாற்றியமைக்கப்பட வேண்டும்.
அதேபோல், எமது நாட்டில் வீழ்ச்சியடைந்துள்ள பாடசாலைக் கட்டமைப்பை, அதிநவீன வசதிகளைக் கொண்ட ஒரு நவீனமயப்படுத்தப்பட்ட பாடசாலைக் கட்டமைப்பாக மாற்றுவதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகளை நாங்கள் வழங்கியுள்ளோம். அத்துடன், பல்கலைக்கழகங்களில் நிலவுகின்ற அனைத்து விடுதிப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண்பதற்கு நாங்கள் எதிர்பார்த்துள்ளோம். மேலும், 2032 ஆம் ஆண்டளவில் இலங்கையில் 50 தொழிற்பயிற்சி நிலையங்களைத் திறப்பதற்கும் திட்டமிட்டுள்ளோம். எனவே, எமது நாட்டுப் பிள்ளைகளின் எதிர்காலக் கதவுகளைத் திறந்துவிடக்கூடிய கல்விச் சீர்திருத்தங்களை நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம். அதுமட்டுமன்றி, பாடசாலைப் பிள்ளைகளுக்குத் தேவையான பாடசாலை உபகரணங்களைப் பெற்றுக்கொள்வதற்குத் தேவையான வசதிகளும் செய்துகொடுக்கப்பட்டுள்ளன. நாங்கள் இந்த நாட்டுப் பிள்ளைகளுக்குக் கல்வியை வழங்குவதற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்ட ஓர் அரசாங்கமாவோம்.
அதேபோன்று, மக்களின் சுகாதார வசதிகளை மேம்படுத்தி, அவர்களுக்கு ஆரோக்கியமானதொரு வாழ்க்கையை உரித்தாக்கிக் கொடுக்கும் பொறுப்பை நாம் தற்போது நிறைவேற்றி வருகின்றோம். நாடு முழுவதும் வைத்தியசாலைகளை நிர்மாணிப்பது மாத்திரமல்லாமல், சுகாதாரத் துறையை தற்போதுள்ள நிலையை விட உயர்வான இடத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும். வைத்தியசாலைகளுக்கு எவ்வளவு அம்பியூலன்ஸ்கள் தேவையோ, அவை அனைத்திற்கும் 2027ஆம் ஆண்டில் நிதியை வழங்குவதற்கு நாம் தீர்மானித்துள்ளோம்.
இன்று விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி காரணமாக, நோய்களை முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் மிக விரைவாகக் குணமடைதல் ஆகியவை உயர் மட்டத்தில் காணப்படுகின்றன. அதற்கெனத் தேவையான உபகரணங்கள் என்னவென்று எங்களுக்குத் தெரிவிக்குமாறு சுகாதார அமைச்சுக்கு நாம் அறிவுறுத்தியுள்ளோம். அடுத்த ஆண்டில் 10 சிறுநீரக சுத்திகரிப்பு (Dialysis) மையங்களை உருவாக்குவதற்கான திட்டங்களை நாம் தயாரித்துள்ளோம். நமது நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பை உயர் நிலைக்குக் கொண்டு வருவதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகளை வழங்க நாம் தயாராக உள்ளோம்.
அதுமட்டுமன்றி, குடிநீர் ஒரு பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது. நமது நாட்டின் முதலாவது சிறுநீரக நோயாளி 1990களின் முற்பகுதியில் மதவாச்சி பிரதேச செயலாளர் பிரிவில் கண்டறியப்பட்டார். தசாப்தங்கள் கடந்து செல்லும்போது அது பரவத் தொடங்கியது. இன்று சிறுநீரக நோயினால் ஒருவர் இறக்கும் போது, அது இனம் காணப்படாத சிறுநீரக நோய் காரணமாகச் சிறுநீரகம் செயலிழந்ததால் ஏற்பட்ட மரணம் என்று அழைக்கப்படுகிறது. அதற்கான ஆராய்ச்சிகளை நாம் முன்னெடுக்க வேண்டும். சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளி இருக்கும் ஒரு குடும்பம் பெரும் சோகத்தை எதிர்கொள்கிறது. எனவே, சிறுநீரக நோய்க்கான ஒரு காரணமாக இனம் காணப்பட்டுள்ள சுத்தமான குடிநீரை நாம் கிராம மக்களுக்கு வழங்க வேண்டும்.
பல தசாப்தங்களாக நமது நாட்டில் குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வந்துள்ளன. நீர்வழங்கல் சபை மற்றும் சமூக நீர் சேவைகள் மூலம் பல தசாப்தங்களாக குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், அந்த மொத்த காலப்பகுதியிலும் நமது நாட்டில் சுமார் 60% அளவிலான மக்களுக்கு மாத்திரமே நீர்வழங்கல் சபை மற்றும் சமூக நீர் சேவைகள் மூலம் நீர் வழங்கப்படுகிறது. 60% நீரை வழங்குவதற்கு எத்தனை தசாப்தங்கள் கடந்துள்ளன? சுமார் 42, 43 இலட்சம் குடும்பங்களுக்கு மாத்திரமே சுத்தமான குடிநீர் வழங்கப்படுகிறது. இது ஒரு சோகமான நிலையாகும்.
எனவே, கடந்த வாரம் நான் அனைத்து மாவட்டங்களினதும் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தனித்தனியாக அழைத்து, தத்தமது பிரதேசங்களில் ஏதேனும் சாத்தியக்கூறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு குடிநீர் திட்டங்கள் அடையாளம் காணப்பட்டிருந்தால் அதனை அறிவிக்குமாறு தெரிவித்தேன். அந்த அனைத்து குடிநீர் திட்டங்களையும் ஆரம்பிப்பதற்காக 2027ஆம் ஆண்டுக்கான
நிதியை ஒதுக்குவதற்குத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தேன். சாத்தியக்கூறு ஆய்வுகள் நிறைவு செய்யப்பட்டுள்ள ஒவ்வொரு நீர் திட்டமும் அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படும். அதன்படி, சுமார் 2,000 கோடி ரூபாய் செலவில் 22 புதிய நீர் திட்டங்களை அடுத்த வருடம் ஆரம்பிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. பழைய திட்டங்களை விரிவுபடுத்துவதன் மூலமும் மற்றும் புதிய திட்டங்கள் மூலமும் புதிதாகச் சுமார் 10 இலட்சம் குடும்பங்களுக்குப் புதிய நீர் இணைப்புகளை வழங்குவதற்கான திட்டங்கள் தற்போது தயாரிக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்த வரலாற்றிலும் இந்த நன்மையை 43 இலட்சம் குடும்பங்களே பெற்றுள்ளன. புதிதாக 10 இலட்சம் குடும்பங்களுக்குக் குடிநீர் வழங்கும் திட்டங்களை இவ்வருடம் நாம் ஆரம்பிப்போம்.
அந்தத் திட்டங்களில் ஒன்றான இந்த அநுராதபுரம் வடக்கு நீர் திட்டத்தின் மூலம் சுமார் 67,000 குடும்பங்களுக்கு நீர் வழங்க முடியும். இதுபோன்ற பல திட்டங்களை நாடு முழுவதும் ஆரம்பிப்பதற்கு நாம் திட்டமிட்டுள்ளோம். நாட்டின் மக்களுக்குச் சுத்தமான குடிநீரை வழங்குவது ஓர் அரசாங்கத்தின் பொறுப்பாகும். அந்தப் பொறுப்பை நாம் நிறைவேற்றுவோம்.
இப்பிரதேச மக்களின் பிரதான வாழ்வாதாரம் விவசாயமாகும். இந்த நாட்டு விவசாய மக்களைக் கவனித்துக் கொள்ளும் ஓர் அரசாங்கத்தைத்தான் இன்று நீங்கள் உருவாக்கியிருக்கிறீர்கள். எந்தவொரு அரசாங்கமும் இந்த அளவிற்கு விவசாய மக்களைக் கவனித்துக்கொண்டதில்லை. நாங்கள் அரசாங்கத்தைப் பொறுப்பேற்கும்போது உர மானியம் 15,000 ரூபாவாகவே இருந்தது. இன்று நாங்கள் அதனை இரண்டு மடங்காக அதிகரித்து, 30,000 ரூபா உர மானியத்தை வழங்குகிறோம். அதேபோன்று, டித்வா சூறாவளி காரணமாக பெருமளவிலான விவசாய நிலங்கள் அழிவடைந்தன. வரலாற்றில் மிகக் கூடிய நட்டஈட்டுத் தொகையை வழங்கி நாங்கள் விவசாய மக்களைக் கவனித்துக்கொண்டோம். முதன்முறையாக மரக்கறி, பழப் பயிர்ச்செய்கைகள் மதிப்பிடப்பட்டு அதற்கும் நட்டஈடு வழங்கப்பட்டது. சேதமடைந்த அனைத்துப் பயிர்களுக்கும் அதிகபட்ச நட்டஈடு வழங்கப்பட்டது. அதேபோல் கால்நடைப் பண்ணைகளுக்கும் நட்டஈடு வழங்கப்பட்டது. இவ்விதம் விவசாய மக்களைக் கவனிக்கும் ஓர் அரசாங்கம் இதுவரையில் உருவானதில்லை. நீங்கள் ஒரு பேரழிவை எதிர்கொண்ட ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாங்கள் அதில் தலையிட்டோம். டித்வா சூறாவளியினால் அழிவடைந்த 65 குளங்களின் புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதேபோன்று, இந்த வடமத்திய மாகாணத்தில் அழிவடைந்த நீர்ப்பாசனக் கால்வாய்களைப் புனரமைப்பதற்காக இந்த ஆண்டில் 200 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
அதேபோல், நாங்கள் பெருமளவிலான பாரிய நீர்ப்பாசனத் திட்டங்களை ஆரம்பித்துள்ளோம். கீழ் மல்வத்து ஓயா திட்டம் பல தசாப்தங்களாக கலந்துரையாடப்பட்டு வந்தது. விலச்சிய, தந்திரிமலே ஆகிய பகுதிகளில் வாழும் மக்கள் கடுமையான நீர் தட்டுப்பாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர். பல நூற்றாண்டுகளாக மல்வத்து ஓயாவின் பெருமளவிலான நீர் கடலில் கலந்து வீணாகிக் கொண்டிருக்கிறது. கீழ் மல்வத்து ஓயா திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க நாங்கள் தீர்மானித்துள்ளோம். அதற்கு சுமார் 4,000 கோடி ரூபா செலவாகும். இந்த வருடத்தில் நாம் அந்த
திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளோம். அடுத்த வருடத்தில் மட்டும் 700 கோடி ரூபாய்க்கான பணிகளை நிறைவு செய்யுமாறு நாம் அறிவுறுத்தியுள்ளோம்.
அதேபோன்று, நீண்ட காலத்திற்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட வட மத்திய “மகஎள” திட்டத்தின் பணிகள் இடையில் நிறுத்தப்பட்டுள்ளன. அந்தத் திட்டத்தையும் விரைவாக முடித்து, மகாகனதர குளம் வரை நீரைக் கொண்டு செல்வதற்குத் திட்டமிட்டுள்ளோம். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க விவசாய நிலங்களில் வாழும் மக்களைப் பாதுகாப்பதும், அவர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுப்பதும் எமது பொறுப்பாகும்.
அதேபோன்று, பெரும்போகத்தில், காலம் பிந்தி அறுவடை செய்த மக்களின் நெல் கொள்வனவில் ஒரு பிரச்சினை உருவானது. அரசாங்கம் நெல் கொள்வனவு செய்த பின்னரே சில பிரதேசங்களில் அறுவடை செய்யப்பட்டது. அந்த மக்கள் ஒரு சில பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துள்ளனர். அதனை நாங்கள் தீர்த்து வைப்போம். அதேபோல், சிறு போகத்தின் அறுவடை தற்போது ஆரம்பமாகியுள்ளது. நெல் அறுவடையை நியாயமான விலைக்கு விற்க முடியாவிட்டால், அது விவசாய மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும்.
எனவே, விவசாய மக்களிடம் இருந்து நியாயமான விலைக்கு நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு நாங்கள் அதிகபட்சமாக தலையிட்டுள்ளோம். நாங்கள் கடந்த பெரும்போகத்தில் நெல் கொள்வனவு செய்தோம். சிறு மற்றும் பெரும்போகம் ஆகிய இரு போகங்களிலும் நெல் கொள்வனவு செய்வதற்காகவே நாங்கள் வரவு செலவுத் திட்டத்தில் அந்தப் பணத்தை ஒதுக்கினோம். ஆனால், நெல் சந்தைப்படுத்தல் சபை அந்தப் பணத்தைக் கொண்டு பெரும்போகத்திலேயே நெல்லைக் கொள்வனவு செய்துவிட்டது. அதன்படி, சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்காக மீண்டும் நிதி ஒதுக்கப்பட்டது. அதன் அடிப்படையில், கடந்த சிறு போகம் மற்றும் இந்த பெரும் போகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, சிறுபோகத்தில் மீண்டும் நெல் கொள்வனவு செய்வதற்காக நிதி ஒதுக்கப்பட்டது. அதாவது கடந்த சிறு போகம், பெரும்போகம் மற்றும் இந்த முறை சிறுபோகம் ஆகியவற்றில் அரசாங்கம் நெல் கொள்வனவு செய்துள்ளது.
அதேபோன்று, நாம் நெல் களஞ்சியசாலைகளைப் புனரமைத்து வருகின்றோம். தனியார் துறையினரையும் பங்காளிகளாக்கிக் கொண்டு களஞ்சியப்படுத்தும் கொள்ளளவை அதிகரித்துள்ளோம். அதுமட்டுமன்றி, தனியார் துறையினர் நெல் கொள்வனவு செய்வதற்குத் தேவையான கடன் தொகைகளை குறைந்த வட்டி வீதத்தின் கீழ் வழங்கியுள்ளோம். நாம் படிப்படியாக விவசாய மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வருகின்றோம். இன்று நாட்டின் மக்கள்
இந்த அரசாங்கத்துடனேயே இருக்கின்றார்கள். ஒரு சிலரின் கூச்சல் குழப்பங்கள் இருக்கத்தான் செய்கின்றன, எனினும் மக்கள் இந்த அரசாங்கத்துடனேயே இருக்கின்றார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது. மக்கள் எதிர்பார்க்கும் அந்த மாற்றத்தை நாம் ஏற்படுத்துவோம்.
இந்த நடவடிக்கைகளின் போது ஜப்பானிய அரசாங்கமும் ஜைக்கா நிறுவனமும் எங்களுக்குப் பாரிய ஒத்துழைப்பை வழங்குகின்றன. 2022ஆம் ஆண்டில் நாம் கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறியமையால், ஜைக்கா நிறுவனம் நடைமுறைப்படுத்திய அனைத்துத் திட்டங்களும் நிறுத்தப்பட்டன. கட்டுநாயக்க விமான நிலையத் திட்டம் நிறுத்தப்பட்டது. ரூபவாஹினி டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்திற்கான ஒப்பந்தம் 2013ஆம் ஆண்டிலேயே கைச்சாத்திடப்பட்டது. 13 ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும் அத்திட்டம் இன்னும் தொடங்கப்படவில்லை. நாம் மிக விரைவில் அத்திட்டத்தைத் தொடங்கி, அதன் பணிகளை விரைவாக நிறைவு செய்வோம். அதேபோன்று, கட்டுநாயக்க விமான நிலையப் பணிகள் இடையில் நிறுத்தப்பட்டன. அத்திட்டத்தை மீண்டும் தொடங்குவதற்காக நாம் விலைமனு கோரியுள்ளோம். இந்த ஆண்டின் ஒக்டோபர், நவம்பர் மாதமளவில் அத்திட்டத்தை மீண்டும் தொடங்க முடியும். அதற்காக ஜப்பானிய அரசாங்கம் வழங்கும் ஒத்துழைப்புக்கு நாம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க,
அநுராதபுரத்தில் எங்களுக்கு நீர் என்பது உயிர். இது குளங்கள் நிறைந்த இராஜ்யம். ஆயினும், குடிப்பதற்கு சிறிதளவு நீரைக் பெற்றுக்கொள்ளச் செல்லும்போது நாம் கடுமையான சிரமங்களை எதிர்கொள்கிறோம். இப்பிரதேசத்தில் வீதியின் இருமருங்கிலும் அதிகமாக இருப்பது நீர் விற்பனை செய்யும் கடைகளாகும். அவ்வாறு நடப்பதற்குக் காரணம், குடிப்பதற்கிருக்கும் நீர் ஊற்றுகளின் மீது நம்பிக்கை இல்லாததேயாகும். குழாய் மூலமான நீரைப் பெற்றுக்கொள்வதற்காக இன்னும் பெருமளவிலான மக்கள் காத்திருக்கிறார்கள்.
இப்போது நிர்மாணிக்கப்பட்டு வருவது பன்னிரண்டு ஏக்கர் பரப்பளவைக் கொண்ட பாரிய சுத்திகரிப்பு நிலையத்துடனான ஒரு திட்டமாகும். இதன் விநியோகக் குழாய்கள் 1500 கிலோமீட்டர் தூரத்திற்கு விரிவடைகின்றன. 67,000 நீர் இணைப்புகளை வழங்கும், 51 பில்லியன் செலவில் அமைக்கப்படும் இலங்கையின் இரண்டாவது மிகப்பெரிய நீர் வழங்கல் திட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்படுகிறது.
இப்பிரதேச மக்களின் குடிநீர் தேவையை நிறைவு செய்வதற்காக மக்கள்நேய அரசாங்கம் என்ற வகையில் இது போன்ற பல பாரிய திட்டங்களை நாங்கள் ஆரம்பித்துள்ளோம். அதுமட்டுமன்றி, அநுராதபுரம் மாவட்டத்தின் நொச்சியாகம, கிரிபாவ திட்டம், எப்பாவல, கல்நேவ, பயாகல போன்ற
பல திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நாட்டு மக்கள் ஒரு மக்கள்நேய அரசாங்கத்தை உருவாக்கி எதிர்பார்த்த நோக்கத்தை நாங்கள் நிறைவேற்றி வருகிறோம்.
வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் வைத்தியர் சுசில் ரணசிங்க,
கெபித்திகொல்லேவ, ஹொரவபொத்தான மற்றும் கஹடகஸ்திகிலிய ஆகிய பிரதேசங்களின் மக்களுக்கு இன்றைய நாள் ஒரு விசேடமான நாளாகும். பொதுவாக இப்பிரதேசங்கள் பின்தங்கிய பிரதேசங்களாகவே அடையாளம் காணப்பட்டுள்ளன. வசதிகள் அற்ற, நகரத்திலிருந்து மிகவும் தொலைவில் அமைந்துள்ள பிரதேசங்களாகவே இவை பார்க்கப்படுகின்றன. அதேபோல், இது சிறுநீரக நோய் அதிகம் உள்ள, ஏழை விவசாயிகள் வாழ்கின்ற ஒரு பிரதேசமுமாகும். வறுமை, ஏழ்மை மற்றும் குறைவான வசதிகள் என்பனவே இப்பிரதேசத்திற்கு கிடைத்துள்ள பெயர்களாகும். ஆனால், எங்களது ஆட்சிக் காலத்தில் இந்த பெயர்களை நாம் அகற்றுவோம். அனைத்து வசதிகளையும் வழங்கி, இப்பிரதேச மக்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதே எங்களது எதிர்பார்ப்பாகும். இந்த நீர் திட்டத்தின் மூலம் அதற்கானதொரு அடித்தளத்தை இடுவதற்கே எதிர்பார்க்கப்படுகிறது.
ஜப்பான் அரசாங்கத்தின் ஒத்துழைப்புடனும், இலங்கை அரசாங்கத்தின் நிதிப் பங்களிப்புடனும் தான் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. எனவே, இந்த சந்தர்ப்பத்தில் நாம் ஜப்பான் அரசாங்கத்திற்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். நாம் அடுத்தடுத்து பல நீர்வழங்கல் திட்டங்களை எதிர்வரும் காலத்தில் திறந்து வைக்கவுள்ளோம்; அவற்றுக்கான அடிக்கற்களையும் நாட்டவுள்ளோம். இன்று மாலை தம்புத்தேகமவில் ஒரு மாபெரும் திட்டம் மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது. இன்னும் சில வாரங்களில் லக்கல நீர் திட்டத்தை நாம் திறந்து வைப்போம். இன்னும் சுமார் ஒன்றரை மாதங்களில் பொல்கஹவெல – பொத்துஹெர நீர் திட்டத்தை மக்கள் மயப்படுத்துவோம். அதேபோல், பாததும்பர நீர் திட்டத்தையும் மிக விரைவில் மக்கள் மயப்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளோம். நீர்வழங்கல் துறையில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம், மறுமலர்ச்சி மற்றும் புத்துயிர்ப்பை ஏற்படுத்துவதற்காக நாம் பெருமளவு நிதியை முதலீடு செய்துள்ளோம்; எதிர்காலத்திலும் முதலீடு செய்ய எதிர்பார்த்துள்ளோம்.
ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனத்தின் (JICA) இலங்கையின் தலைமைப் பிரதிநிதி Kuronuma Kenji,
இலங்கையின் நீர் வழங்கல் சேவைகளை மேம்படுத்துவதற்காக ஜப்பான் வழங்கும் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை இந்தத் திட்டம் வெளிப்படுத்துகிறது. புதிய நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் நீர் இணைப்புகள் மூலம், 164 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 67,000 குடும்பங்களுக்கு பாதுகாப்பான குடிநீரை வழங்குவதற்கு இந்த இரண்டாம் கட்டத்தில்
எதிர்பார்க்கப்படுகிறது. இது மக்களின் அன்றாட வாழ்க்கைக்கும், சமூக-பொருளாதார வளர்ச்சிக்கும் பெரும் பக்கபலமாக அமையும்.
அத்துடன், இந்தத் திட்டம் பொது சுகாதாரத்திற்காக செய்யப்படும் ஒரு பாரிய முதலீடாகும். பாதுகாப்பற்ற நிலத்தடி நீரினால் ஏற்படும் நீண்டகால சிறுநீரக நோய் (CKD) மற்றும் பல், எலும்புகள் தொடர்பான புளோரோசிஸ் போன்ற நீண்டகால சுகாதார அபாயங்களுக்கு இதுவொரு தீர்வாகும். சுத்தமான மற்றும் நம்பகமான குடிநீரை வழங்குவதன் மூலம், ஆரோக்கியமான மற்றும் வலுவானதொரு சமூகத்தை கட்டியெழுப்ப இது உதவுகிறது.
ஜைக்கா நிறுவனம், இலங்கை அரசாங்கம் மற்றும் தேசிய நீர் வழங்கல், வடிகாலமைப்பு சபையுடன் நெருக்கமாகப் பணியாற்றி, இத்திட்டத்தை உரிய நேரத்தில் நிறைவு செய்து அதன் பலன்களை மக்களுக்குப் பெற்றுக்கொடுக்க அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது.
இலங்கைக்கான ஜப்பானின் பதில் தூதுவர் KAMOSHIDA Naoaki,
இந்தத் திட்டத்திற்காகக் கடினமாக உழைத்த அனைவரினதும் அர்ப்பணிப்பின் காரணமாகவே, இன்று எம்மால் இந்த அடிக்கல் நாட்டு விழாவைக் காணக்கூடியதாக உள்ளது. இந்தத் திட்டத்தை முன்னோக்கி எடுத்துச் செல்வதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம். நீர் இல்லாமல் எவராலும் வாழ முடியாது. சுத்தமான மற்றும் பாதுகாப்பான குடிநீரைப் பெற்றுக்கொள்வது மக்களின் வாழ்க்கைக்கு இன்றியமையாததாகும். மக்களின் வாழ்வாதாரம் தங்கியுள்ள விவசாயத் துறைக்கும் நிலையான நீர் விநியோகம் முக்கியமானது.
இந்தத் திட்டத்தின் மூலம் அநுராதபுர மாவட்டத்தில் சுமார் 67,000 குடும்பங்களுக்குப் பாதுகாப்பான குடிநீரை வழங்க எதிர்பார்ப்பதுடன், மக்கள் நீண்டகாலமாக நாள்பட்ட சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் திட்டத்தின் பலன்களை மிக விரைவாக உள்ளூர் சமூகத்திற்கு வழங்குவதற்காக, எமது இலங்கைத் தரப்பினருடன் தொடர்ந்து பணியாற்ற நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு ஜப்பான் ஒரு நிலையான பங்காளியாகத் தொடர்ந்து செயல்படுவதால், இந்தத் திட்டம் ஒரு பாரிய அடையாளமாக அமைந்துள்ளது. இலங்கை தனது கடனைச் செலுத்தத் தவறியதைத் தொடர்ந்து, ஜப்பானால் வழங்கப்பட்ட சலுகைக் கடனுதவியின் கீழ் நிதியளிக்கப்பட்ட இந்தத் திட்டம் சில காலம் நிறுத்தப்பட வேண்டியிருந்தது என்பது உண்மையே. எவ்வாறாயினும், இலங்கை எமது ஒரு முக்கியமான பங்காளியாக இருப்பதனால், ஜப்பான், இந்தியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன் இணைந்து இருதரப்பு உத்தியோகபூர்வ
கடன் வழங்குநர்கள் குழுவிற்குத் தலைமை தாங்கி, அரச கடன் மறுசீரமைப்பு மீதான பேச்சுவார்த்தைகளுக்கு வழிவகுத்தது.
அக்குழுவிற்கும் இலங்கைக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தான உடனே, 2024 ஜூலை மாதத்தில் இத்திட்டத்திற்கான நிதியை விடுவிப்பது உட்பட, தற்போது நடைமுறையிலுள்ள சலுகைக் கடன் திட்டங்களை மீண்டும் ஆரம்பிக்கத் தீர்மானித்த முதல் நாடு ஜப்பானாகும். சர்வதேச நிதிச் சந்தையில் இலங்கை நம்பிக்கையைப் பெறுவதற்கு, தற்போது நடைமுறையிலுள்ள இச்சலுகைக் கடன் திட்டங்கள் மிகவும் முக்கியமானவையாகும். எனவே, இத்திட்டத்தின் செயல்பாடுகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவது குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
அரசின் வலுவான பேரினப் பொருளாதாரக் கொள்கையின் காரணமாக இலங்கையின் பொருளாதாரம் தற்போது ஸ்திரமடைந்துள்ளது. இலங்கை தற்போது நிலையான வளர்ச்சியை நோக்கி மீண்டும் பயணிப்பதில் ஒரு தீர்க்கமான திருப்புமுனையில் உள்ளது. பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகள் திட்டங்களின் மூலம் ஜப்பான் இலங்கைக்குத் தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றது.
பாராளுமன்ற உறுப்பினர் சுசந்த குமார நவரத்னவும் இங்கு கருத்து தெரிவித்தார்.
மாகாணத்தின் மகா சங்கத்தினர் மற்றும் மதத் தலைவர்கள், வட மத்திய மாகாண ஆளுநர் வசந்த ஜினதாச, மாகாணத்தின் மக்கள் பிரதிநிதிகள், வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் செயலாளர் பொறியியலாளர் எல். குமுது லால் போகஹவத்த, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் தலைவர் பொறியியலாளர் சந்தன பண்டார, பொது முகாமையாளர் பொறியியலாளர் டி. பாரதிதாசன் ஆகியோருடன், அரச அதிகாரிகள், பிரதேசவாசிகள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2026-07-10
