கல்வி முதுமாணிப் பட்டம் பெற்ற ஆசிரியர்களுக்குப் பாராட்டு விழா: சிறப்பாகக் கௌரவித்த பாடசாலை சமூகம்
அக்கரபத்தனை: ம.மா.நு/கிலைன்ளைன் த.ம.வி. பாடசாலையில் சேவையாற்றி வரும் ஆசிரியர்களான திரு. S. தயான் மற்றும் திருமதி. S. திலகமலர் ஆகியோர் கல்வி முதுமாணிப் பட்டத்தினைப் பெற்று சாதனை படைத்துள்ளனர். இவர்களின் இந்த உயரிய கல்வி அடைவை முன்னிட்டு, பாடசாலையில் விசேட பாராட்டு நிகழ்வு ஒன்று அண்மையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், உப அதிபர், பகுதித் தலைவர்கள், சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பாடசாலை சமூகத்தினர் அனைவரும் திரளாகக் கலந்துகொண்டனர்.
இதன்போது, கல்வி முதுமாணிப் பட்டம் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்த ஆசிரியர்கள் இருவருக்கும் பாடசாலை சமூகம் சார்பில் பொன்னாடை போர்த்தப்பட்டு, மலர்மாலை அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். தமது கல்வியை மேலும் மெருகேற்றிக்கொண்ட இவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சியைப் பாராட்டி அதிபர் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்துரைகளை வழங்கினர்.
மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக ஆசிரியர்கள் இவ்வாறான உயர் கல்வியைக் கற்பது, பாடசாலையின் கல்வித் தரத்தை மேலும் உயர்த்தும் ஒரு உந்துசக்தியாக அமையும் என நிகழ்வில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. கௌரவிக்கப்பட்ட ஆசிரியர்கள் இருவருக்கும் பாடசாலை சமூகம் தமது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டது.
