வரலாற்றுச் சிறப்புமிக்க ருஹுணு கதிர்காம மகா தேவாலயத்தின் எசல பெரஹரா உற்சவத்தில் ஜனாதிபதி பங்கேற்பு
அனைத்து இன மக்களையும் ஒரே புனிதஸ்தலத்தில் ஒன்றிணைக்கும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு, நமது நாட்டின் தேசிய தனித்துவத்தையும் தேசிய ஒற்றுமையையும் பிரதிபலிக்கிறது.
– ஜனாதிபதி
வரலாற்றுச் சிறப்புமிக்க ருஹுணு கதிர்காம மகா தேவாலயத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான எசல பெரஹராவின் இறுதிப் பெரஹரா நேற்று (29) இரவு வீதி உலா வந்ததுடன், பெரஹராவைப் பார்வையிட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவும் இணைந்துகொண்டார்.
நேற்று (29) பிற்பகல் வரலாற்றுச் சிறப்புமிக்க கிரிவெஹெர ராஜமகா விகாரைக்கு வருகை தந்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, ருஹுணு பிரதான சங்கநாயக்க, வரலாற்றுச் சிறப்புமிக்க கிரிவெஹெர ராஜமகா விகாராதிபதி வண. கொபவக தம்மிந்த தேரரைச் சந்தித்து ஆசி பெற்றார்.
பின்னர் ஜனாதிபதி, ஆயிரக்கணக்கான மக்களுடன் இணைந்து பெரஹராவைக் கண்டுகளித்தார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க கிரிவெஹெர அருகில் நடைபெற்ற மத அனுஷ்டானங்களில் கலந்துகொண்ட ஜனாதிபதி, ஹஸ்திராஜா யானை மீது புனித கலசத்தை வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டார்.
பின்னர் கிரிவெஹெர வளாகத்தில் மின் விளக்கு அலங்காரத்தையும் ஜனாதிபதி திறந்து வைத்தார்.
நாட்டின் அனைத்து இன மக்களையும் ஒரே புனிதஸ்தலத்தில் ஒன்றிணைக்கும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு, நமது நாட்டின் தேசிய தனித்துவத்தையும் தேசிய ஒற்றுமையையும் பிரதிபலிக்கும் ஒரு சந்தர்ப்பமாகும் என்று இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சுட்டிக்காட்டினார்.
எந்தவொரு நாட்டின் அபிவிருத்தியிலும் அந்த நாடும் சமூகமும் கட்டமைக்கப்பட்ட வரலாற்று மற்றும் கலாசார அடித்தளம் முக்கியமானது என்றும், உலகம் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டாலும் நமது நாடு நாட்டின் வரலாற்றுச் சுவடுகள் மற்றும் அடித்தளங்களைப் பாதுகாத்துக் கொண்டே முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்றும் இதன்போது சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அந்த வரலாற்றுக் கலாசார பாரம்பரியத்திற்கும் தாய்நாட்டுக்கும் இடையிலான மக்களின் ஆழமான தொடர்பைக் காட்டும் மிக முக்கியமான சந்தர்ப்பமாக, இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ருஹுணு கதிர்காம மகா தேவாலயத்தின் வருடாந்த எசலா பெரஹெராவை குறிப்பிடலாம் என்றும் தெரிவித்தார்.
இங்கு மேலும் உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க,
எந்தவொரு சமூகமும் நாடும் அந்த நாட்டுக்கும் சமூகத்துக்கும் தனித்துவமான கலாசார அடித்தளத்துடனேயே நிலைத்திருக்கிறது. இந்த யுகம், உலகில் அறிவியலும் தொழில்நுட்பமும் பாரிய பிரவேசங்களையும் வளர்ச்சியையும் காட்டும் ஒரு யுகமாகும். உலகின் கலை மற்றும் இலக்கியத்திற்குள் இந்தத் தொழில்நுட்பத்துடன் இணைந்து மிகப்பெரிய மாற்றங்களை இந்த யுகம் ஏற்படுத்துகிறது.
எந்தவொரு நாட்டின் வளர்ச்சியிலும் அந்த நாடும் சமூகமும் கட்டமைக்கப்பட்ட வரலாற்று ரீதியான கலாசார அடித்தளம் மிக முக்கியமானதாகும். உலகில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்திக்கொண்டாலும், நமது நாடு நாட்டின் வரலாற்றுச் சுவடுகளையும் அடித்தளங்களையும் பாதுகாத்துக் கொண்டே முன்னோக்கிச் செல்ல வேண்டும். பூமியுடன் நாம் கொண்டுள்ள இயற்கையான தொடர்பை துண்டித்துக் கொண்டால், நாம் வீழ்ச்சியடையும் சமூகமாக மாறிவிடுவோம். இது நாட்டின் அடையாளம், சமூகத்தின் கௌரவம் ஆகிய அனைத்தையும் அழித்துவிடும். அந்த வரலாற்றுக் கலாசார பாரம்பரியத்திற்கும் தாய்நாட்டுக்கும் மக்களுக்கும் இடையிலான இயல்பான தொடர்பைக் காட்டும் மிக முக்கியமான சந்தர்ப்பமாக இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ருஹுணு கதிர்காம மகா தேவாலயத்தின் பெரஹராவைக் குறிப்பிடலாம்.
எமது நாயக்க தேரர் குறிப்பிட்டது போல், 2187 ஆண்டுகளாக இடைவிடாமல் இந்த பெரஹரா நடைபெற்று வருகிறது. இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்டுகளாக இடைவிடாமல் ஏதேனும் ஒரு விடயம் அல்லது கலாசார நிகழ்வு நடைபெற்று வந்தால், அது எவ்வளவு ஆழமான கலாசார அடித்தளத்தை உருவாக்குகிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும். எமது பல தலைமுறைகள் இந்த வரலாற்று நிகழ்வுடன் தொடர்புகொண்டுள்ளன. ஒரு சமூகம் இடைவிடாமல் நிலைத்திருப்பது, அந்த கலாசார பாரம்பரியங்களுடன் இடைவிடாமல் இணைந்திருக்கும் பட்சத்தில் மாத்திரமே சாத்தியமாகும். எனவே, ஆண்டுதோறும் நடத்தப்படும் ருஹுணு கதிர்காம மகா தேவாலயத்தின் இந்தப் பெரஹரா, நமது வரலாற்றுப் பாரம்பரியத்தையும் நமது நாடு கட்டியெழுப்பப்பட்டுள்ள கலாசார அடித்தளத்தையும் பாதுகாத்து, எதிர்கால சந்ததியினருக்காக அந்த கலாசார பாரம்பரியங்களை உரித்தாக்கிக் கொடுக்கும் மிக முக்கியமான வரலாற்று நிகழ்வாகும்.
நமது சமூகத்தைப் பார்க்கும்போது, புதிய சந்ததியினர் கலாசார பாரம்பரியங்களில் இருந்து விலகிச் செல்கிறார்களா என்ற எண்ணம் நமக்குத் தோன்றுகிறது. எனினும், இந்தப் பெரஹராவைப் பார்க்கும்போது, இள வயதுடைய ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகள் நமது முன்னோர்களின் கலாசார பாரம்பரியங்களை முன்னிறுத்தி இந்தப் பெரஹராவில் ஊர்வலமாகச் செல்வதை நாம் காண்கிறோம். இந்த இளைஞர் யுவதிகள் இந்த வரலாற்றுப் பாரம்பரியங்களை மேலும் நீண்ட காலத்திற்குத் கொண்டு செல்வதற்கான சவாலை ஏற்றுக்கொண்டுள்ளனர் என்பதையும், அதை வெற்றிகரமாக முன்னோக்கி கொண்டு செல்ல அவர்களுக்குத் திறமை உள்ளது என்பதையும் இது நமக்குக் காட்டுகிறது.
இந்தப் பாரிய பொறுப்பு மிக்க பணியில் எமது நாயக்க தேரர் ஆற்றிய சேவை மிகவும் முக்கியமானதாகும். இந்தப் பெரஹராவையும் அதனுடன் தொடர்புடைய கலாசார பாரம்பரியங்களையும் பார்க்கும்போது, வடக்கின் தமிழ் மக்கள் பல வாரங்களாகப் பாதயாத்திரையாக அடர்ந்த காட்டில் உள்ள விலங்கினங்களின் ஆபத்துகளுக்கு முகம் கொடுத்து இந்த நிகழ்வுக்கு வருகிறார்கள். அதேபோல், முஸ்லிம் மக்கள் தமக்குரிய தனித்துவமான வழிபாடுகளில் ஈடுபடுகின்றனர். இலட்சக்கணக்கான சிங்கள மக்களும் இந்தப் பெரஹராவுடன் இணைந்து கொள்கின்றனர். எனவே, இந்த நிகழ்வு நமது நாட்டின் தேசிய தனித்துவத்தையும் தேசிய ஒற்றுமையையும் பிரதிபலிக்கும் ஒரு சந்தர்ப்பமாகும்.
இந்தப் பாரிய பணியை வெற்றிகரமாக நிறைவேற்றுவதில் எமது நாயக்க தேரரின் வழிகாட்டலும் தலைமைத்துவமும் மிகப் பாரிய அளவில் பங்களிக்கின்றன. சமூகத்தில் பல்வேறு பிரிவினைகளும் மோதல்களும் நிலவும் ஒரு யுகத்தில், பல்வேறு பிளவுகளுடனும் முரண்பாடுகளுடனும் போராடும் ஒரு யுகத்தில், அமைதியையும் ஒற்றுமையையும் பேணி அனைத்து மக்களையும் ஒரே வழிபாட்டுத் தலத்தில் ஒன்றிணைத்து நடத்தப்படும் இந்த வரலாற்று நிகழ்வு மூலம் எமது நாயக்க தேரர் செய்யும் மகத்தான அர்ப்பணிப்பு வெளிப்படுத்தப்படுகிறது. அதற்காக நாம் எப்போதும் அவருக்கு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். அதேபோல், புதிய பஸ்நாயக்க நிலமே உள்ளிட்ட இதற்காக பங்களிப்புச் செய்த அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவிக்கிறேன்.
பெரஹெரவின் நிறைவுப் பிரகடன சன்னஸ் பத்திரத்தை வரலாற்றுச் சிறப்புமிக்க கிரிவெஹர ரஜமஹா விகாரையின் விகாராதிபதி வண. கொபவக்க தம்மிந்த தேரரிடம் ஜனாதிபதி கையளித்தார்.
வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஆர்.எம். ஜயவர்தன, ஊவா மாகாண ஆளுநர் சட்டத்தரணி கபில ஜயசேகர, பாராளுமன்ற உறுப்பினர் ருவன் விஜேவீர உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், மொனராகலை மாவட்டச் செயலாளர் ஏ.ஜி. நிஷாந்த, பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய, வரலாற்றுச் சிறப்புமிக்க ருஹுணு கதிர்காம மகா தேவாலயத்தின் பஸ்நாயக்க நிலமே திலின மதுசங்க ஆகியோருடன், வர்த்தகர்கள் உட்பட பெருமளவிலான பக்தர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2026-07-30
