2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்றைய தினம் (10) முதல் செப்டம்பர் 05 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகியுள்ளது.
நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 2,532 பரீட்சை நிலையங்களில், இம்முறை பரீட்சைக்காக 372,310 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர். இவர்களில் 264,496 பாடசாலைப் பரீட்சார்த்திகளும், 107,814 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் அடங்குவதாகப் பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.”
”பரீட்சை எழுதும் மாணவர்களுக்காகப் பரீட்சை ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி சில விசேட அறிவுறுத்தல்களை விடுத்துள்ளார்.
அதற்கமைய, பரீட்சை ஆரம்பமாவதற்கு குறைந்தது ஒரு மணித்தியாலத்திற்கு முன்னதாக அனைத்துப் பரீட்சார்த்திகளும் தத்தமது பரீட்சை நிலையங்களுக்குச் சமூகமளிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், கைத்தொலைபேசிகள், ஸ்மார்ட் கடிகாரங்கள், குறிப்புகள் மற்றும் புளூடூத் உள்ளிட்ட எந்தவொரு இலத்திரனியல் சாதனங்களையும் பரீட்சை மண்டபத்திற்குள் கொண்டு செல்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
கடந்த வருடங்களில் பரீட்சை மோசடிகள் காரணமாகப் பல மாணவர்களின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ள ஆணையாளர் நாயகம், மாணவர்கள் எத்தகைய மோசடிகளிலும் ஈடுபடாமல், பரீட்சை விதிமுறைகளுக்கு அமையச் செயற்படுமாறு கடுமையாக எச்சரித்துள்ளார்.
எவ்வாறாயினும், நாட்டில் ஏதேனும் அவசர அனர்த்த நிலைமைகள் ஏற்பட்டால், மாணவர்களுக்குத் தேவையான வசதிகளை உடனுக்குடன் செய்துகொடுக்கப் பரீட்சைத் திணைக்களம் முழுமையான ஏற்பாடுகளைச் செய்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.”
