சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை இளைஞரான சிவராசா அனோஜனின் பெற்றோர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து உரையாடியுள்ளனர்.
சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள தமது மகனின் உயிரைப் பாதுகாக்க அரசாங்கம் உடனடியாகத் தலையிட்டுத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அவரது பெற்றோர் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டனர்.
பெற்றோரின் கோரிக்கையைக் செவிமடுத்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, சிவராசா அனோஜனுக்குப் பொதுமன்னிப்புப் பெற்றுக்கொடுக்கச் சட்டரீதியாகவும் இராஜாங்க மட்டத்திலும் அரசாங்கம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தார். மேலும், சவூதி அரசாங்கத்திடம் இது தொடர்பாக எழுத்துமூலமான பொதுமன்னிப்புக் கோரிக்கை விடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
நிகழ்வில் கலந்துகொண்ட வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், சவூதியில் உள்ள இலங்கைத் தூதரகம் ஊடாக சவூதி அதிகாரிகளுடன் தொடர்ச்சியான அவதானம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள் பிரதி அமைச்சர் முனீர் முஹம்மர் மற்றும் சிவராசா அனோஜனின் குடும்ப உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
