கனடா, டொரோண்டோ உலகத் தமிழ் ஆய்வு மாநாடு – 2026 இல் ஆய்வாளர், அருணாசலம் லெட்சுமணன் அவர்களது ஆய்வுரை இடம்பெறவுள்ளது.
எதிர்வரும் 15ம் திகதி தொடக்கம் 18 திகதி வரையில் கனடா, டொரோண்டோ நகரில் இடம்பெறவுள்ள செய்யறி உலகில் சொம்மொழி தமிழும் தமிழர்களும் எனும் தொனிப்பொருளில் இடம்பெறவுள்ள உலகத் தமிழ் ஆய்வு மாநாட்டில் ஆய்வாளர் அருணாசலம் லெட்சுமணன் அவர்களது ஆய்வுரையும் இடம்பெறவுள்ளது. இவ் ஆய்வரங்கிற்காக உலகெங்கும் வாழும் ஆய்வாளர்களிடமிருந்து ஆய்வுச்சுருக்கங்கள் கோரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். அதற்கு அமைவாக இம் மாநாட்டின் ஆய்வுக்கட்டுரை தெரிவுக்குழுவிற்கு கிடைக்கப்பெற்றிருந்த 497 ஆய்வுச்சுருக்கங்களில் இருந்து 80 ஆய்வுச்சுருக்கங்கள் ஆய்வுக்கட்டுரையை முழுமைப்படுத்துவதற்காக தெரிவு செய்யப்பட்டிருந்தது. கனடா நேரப்படி 15.10.2026 அன்று தொடங்கும் இம் மாநாட்டில் 16.10.2026 அன்று பி.ப 12:40 மணி தொடக்கம் 14:10 வரையில் இடம்பெறவுள்ள அமர்விலேயே இவரது உரையும் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
இம் ஆய்வு மாநாட்டில் இலங்கை மலையகத்தில் இருந்து பங்கேற்கும் ஓர் ஆய்வாளராக அருணாசலம் லெட்சுமணன் விளங்குகிறார். மலையக கலை இலக்கிய ஆய்வுத்துறைகளில் தடம் பதித்து வரும் ஆய்வாளராக அருணாசலம் லெட்சுமணன் விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். மலையக கலை இலக்கிய சமூக நிலையை சர்வதேச அரங்குகளில் அடையாளப்படுத்தும் முனைப்புடன் செயற்படும் அன்னாரின் ஈடுபாடு கவனத்திற்குரியதாக விளங்குகிறது. சர்வதேச ஆய்வரங்குகள் மற்றும் நிகழ்வுகளில் அன்னாரின் தொடர்ச்சியான பங்கேற்பு மலையகம் மீதான கவனத்தையும் காத்திரத்தையும் எடுத்துரைக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்தியா, மலேசியா, கம்போடியா போன்ற நாடுகளில் இடம்பெற்ற ஆய்வு மாநாடுகளில் பங்கேற்றுள்ளதுடன் இணைய வழியிலும் அன்னாரின் தொடர் பங்கேற்பு முக்கியத்துவத்திற்குரியனவாக திகழ்கின்றன. உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு வரிசையில் மலையகத்தில் இருந்து பங்கேற்ற முதலாவது ஆய்வாளராக அருணாசலம் லெட்சுமணன் விளங்குகிறார். 2023ம் வருடம் மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இடமபெற்ற 11வது தமிழாராய்ச்சி மாநாட்டில் பங்கேற்று ஆய்வுரை நிகழ்த்தியதுடன் அவ் அரங்கிலும் அதற்கு அப்பாலும் மலையகத்தை சிறப்பாக அடையாளப்படுத்தியுள்ளார். இப் பயண அனுபவத்தை தினகரன் வார இதழில் தொடராக எழுதியதுடன் அத் தொடரை ‘மனதிற்கினிய மலேசிய பயணம்’ எனும் தலைப்பில் நூலாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார்.
கனடாவில் இருந்து வெளிவரும் “தாய்வீடு” இதழில் இவர் எழுதிய “மலையக மக்களின் வாழ்வியலோடு பின்னிப்பிணைந்த கலையாக காமன் கூத்து” வாசகர்கள் மத்தியில் பெரும் அபிமானத்தை பெற்றிருந்தது. அத் தொடர்களை ஒனறிணைத்து வெளியிடும் பணியில் தாய்வீடு பதிப்பகம் ஈடுபட்டுள்ளது. அவ்வாறே தாய்வீடு இதழில் வெளியான மலையக சமூக கலை இலக்கிய வரலாற்று அம்சங்கள் குறித்த கட்டுரைகளின் தொகுப்புக்களும் விரைவில் நூலாக வெளிவரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மலையக சமூக அசைவியக்கத்தில் எழுச்சி இலக்கியங்கள் குறித்த பார்வையில் “மலையக வீதிப்பாடல்கள்” குறித்த கவனம் முக்கியத்திற்குரியதாகும். அவ் விடயம் பற்றிய அருணாசலம் லெட்சுமணன் எழுதும் தொடர் சமகாலத்தில் “எழுநா” இதழில் வெளியாகி வாசகர்களன் வரவேற்பை பெற்று வருகிறது. அத் தொடரையும் விரைவில் நூலாக்கும் செயல்பாட்டில் “எழுநா” குழுமம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அவ்வாறே இவ் இதழில் வெளியான கட்டுரைகளையும் நூலாக தொகுக்கும் பணியிலும் எழுநாவின் பங்கேற்பு குறிப்பிடத்தக்கதாகும்.
மலையக மக்களின் இயற்கைசார் வாழ்வியல் அம்சங்களை பதியும் வகையில் “தமிழன்” வார இதழில் இவர் எழுதிய “நம்ம தோட்டம்” தொடர் ஐம்பது வாரங்கள் வெளியாகின. அத் தொடர்கள் ஒன்றிணைத்து தொகுப்பு நூலாகவும் வெளிவரவுள்ளது.
இவரது ஆய்வுக்கட்டுரைகள் தேசிய, சர்வதேசிய இதழ்களிலும் ஆய்வரங்குகளிலும் தொடர்ந்து வெளிவருகின்றன. தமிழகம் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இடம்பெறுகின்ற இணையவழி நிகழ்வுகளில் பங்கேற்று விசேட உரைகளை ஆற்றுகின்றமையும் குறிப்பிடத்தக்கது. ஆய்வுத்தளங்களில் இவரது தொடர்ச்சியானதும் காத்திரமானதுமான பங்கேற்பு மலையக சமூகத்திற்கு கிடைக்கப்பெறுகின்ற அங்கீகாரமாகவே அமைகிறது. இம் மாநாட்டில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்த போதிலும் தவிர்க்க முடியாத காரணத்தினால் நேரடியாக பங்கேற்க முடியவில்லை. இருந்த போதிலும் இவரது கட்டுரை ஆய்வு மாநாட்டு வெளியீடுகளில் இடம்பெறுகின்றன. மேலும் இவரது ஆய்வுரை இணைய வழியினூடாக இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. அன்னாரது தொடர் பங்கேற்பின் ஊடாக மலையகம் பற்றிய அவதானம் ஆய்வுலகில் கவனத்தை பெறுவதாக விளங்குகிறது. இவ்வாறு இவரால் முன்வைக்கப்பட்ட ஆய்வரங்க கட்டுரைகளும் தொகுக்கப்பட வேண்டியதும் அவசியமாகும். இவரின் ஆக்கபூர்வ பணி மேலும் சிறப்புர வாழ்த்துவோம்.
