போக்குவரத்து விதிகளை அடிக்கடி மீறும் சாரதிகளைத் தண்டிப்பதே புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சாரதி உரிமப் புள்ளி முறைமையின் முதன்மை நோக்கமாகும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இப்புதிய முறைமையின் கீழ் சாரதிகள் செய்யும் போக்குவரத்து குற்றங்களின் தன்மைக்கு ஏற்ப புள்ளிகள் சேர்க்கப்படும். இப்புள்ளிகளின் எண்ணிக்கை 30 ஐ எட்டும்போது சம்பந்தப்பட்டவரின் சாரதி உரிமம் தானாகவே இடைநிறுத்தப்படும். இவ்வாறு உரிமம் ரத்து செய்யப்படும் சாரதிகள் அதனை அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும்.
அத்துடன், குற்றம் புரிந்த சாரதிகளுக்குச் சேர்க்கப்படும் புள்ளிகள் குறித்த விவரங்கள் அவர்களின் கைபேசிக்குக் குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, அச்சு இயந்திரங்கள் மற்றும் அட்டைகளின் பற்றாக்குறை காரணமாக சுமார் 6 இலட்சத்து 73 ஆயிரம் சாரதி அனுமதி அட்டைகள் அச்சிடப்படாமல் தேங்கிக் கிடப்பதாகவும் இக்கலந்தரையாடலின் போது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
