கொழும்பு மத்திய தபால் பரிமாற்றகத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, அறுபத்தி ஏழு கோடியே ஐம்பத்து மூவாயிரத்திற்கும் அதிக பெறுமதியான பெருந்தொகை போதைப்பொருட்கள் இலங்கைச் சுங்கத் திணைக்களத்தினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன!
வெளிநாடுகளில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டு, உரிமையாளர்கள் எவரும் பெற்றுக்கொள்ளாமல் தடுத்து வைக்கப்பட்டிருந்த 11 தபால் பொதிகளுக்குள்ளேயே இந்த அதிவேக போதைப்பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டு வந்துள்ளன.
தாய்லாந்து, அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, பெல்ஜியம், பிரான்ஸ், நெதர்லாந்து மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளிலிருந்தே இந்தத் தபால் பொதிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறிப்பாக, தாய்லாந்து, அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவில் இருந்து அனுப்பப்பட்ட பொதிகளில் இருந்து மூன்று கிலோ கிராம்களுக்கும் அதிகமான குஷ் போதைப்பொருளும், பெல்ஜியம், பிரான்ஸ், கனடா மற்றும் ஜேர்மனியிலிருந்து அனுப்பப்பட்ட பொதிகளில் இருந்து சுமார் இரண்டாயிரத்து நானூறு கிராம் MDMA மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இதில் பெல்ஜியத்திலிருந்து அனுப்பப்பட்ட பொதியொன்றில் மாத்திரம் முப்பத்து மூன்று மில்லியனுக்கும் அதிகமான பெறுமதியான மாத்திரைகள் அடங்கியுள்ளதாகச் சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், நெதர்லாந்தில் இருந்து அனுப்பப்பட்ட பொதியொன்றில் இருந்து முப்பத்து மூன்று கிராம் மெண்டி போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளது.
தபால் பரிமாற்றகத்தில் ஆரம்பக் கட்டப் பரிசோதனைகள் முடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மேலதிக சட்டநடவடிக்கைகளுக்காகக் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொகையானது பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
