கம்பளை – கண்டி பிரதான வீதியில் உள்ள வியாபார நிலையமொன்றில் நள்ளிரவில் திருடும் நோக்கில் கூரையின் மீது ஏறிய நபரொருவரைப் பொலிஸாரும் பொதுமக்களும் இணைந்து மடக்கிப் பிடித்துள்ளனர்.
நேற்று நள்ளிரவு பெய்த பலத்த மழைக்கு மத்தியில் இத்திருட்டு முயற்சி இடம்பெற்றுள்ளது. வியாபார நிலையத்திற்குள் நுழைய முற்பட்டபோது ஏற்பட்ட சத்தத்தைக் கேட்டு, அருகிலிருந்த பொதுமக்கள் விழிப்படைந்து கம்பளை பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.
உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், பொதுமக்களின் உதவியுடன் திருடனை கையும் களவுமாகப் பிடித்துள்ளனர்.
இல்லவத்துர பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேகநபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், கம்பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
