தீபாவளி வியாபாரத்திற்காக ஆடைகளை ஏற்றிவந்த லொறி 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது: மூவர் உயிர்தப்பினர்!
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு தலவாக்கலை நகருக்கு ஆடைகளை ஏற்றிவந்த Bolero ரக லொறியொன்று சுமார் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. எனினும், லொறியில் பயணித்த மூவரும் எவ்வித உயிராபத்துமின்றி உயிர்தப்பியுள்ளனர்.
இவ்விபத்து இன்று (03) முற்பகல் 10 மணியளவில் நுவரெலியா – ஹட்டன் – நானுஓயா சுற்றுவட்ட வீதியின் கிரிமெட்டிய பகுதியில் இடம்பெற்றுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.
கதிர்காமத்திலிருந்து தலவாக்கலை நோக்கி ஆடைகளை ஏற்றிக்கொண்டு பயணித்த குறித்த லொறி, கிரிமெட்டிய பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது.
இதன்போது லொறியில் இருந்த மூவரும் விபத்து ஏற்படுவதற்கு முன்னதாக வாகனத்திலிருந்து வெளியே குதித்ததால் உயிர் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
