மேல்மாகாணம்- கொழும்பு மாவட்டம் கொழும்பு மாநகரம், கொச்சிக்கடை அருள்மிகு பொன்னம்பல வாணேசுவரர் சிவன் திருக்கோயில்

அண்டமெல்லாம் ஆட்டுவிக்கும் எங்கள் சிவனே
அறநெறியை மேலோங்க உறுதி செய்வாய் ஐயா
அச்சம் அகற்றிடுவாய் ஆதரவைத் தந்திடுவாய்
கொழும்பு மாநகர் கோயில் கொண்ட பொன்னம்பல வாணேசுவரப் பெருமானே

உமையவளை உடன் கொண்டு உறைகின்ற சிவனே
உண்மையெங்கும் நிலைபெறவே உறுதிசெய்வாய் ஐயா
ஆணவம் அகற்றிடுவாய் அன்பைப் பெருக்கிடுவாய்
கொழும்பு மாநகர் கோயில் கொண்ட பொன்னம்பல வாணேசுவரப் பெருமானே
ஐந்தொழில்கள் ஆற்றியுலகை ஆட்சி செய்யும் சிவனே
ஐயமில்லா நல்வாழ்வை உறுதி செய்வாய் ஐயா துன்பம் அகற்றிடுவாய் துணிவைத் தந்திடுவாய்
கொழும்பு மாநகர் கோயில் கொண்ட பொன்னம்பல வாணேசுவரப் பெருமானே
இயற்கையின் இயக்கமாய் இருந்தருளும் சிவனே
இன்பமிகு வாழ்வினையே உறுதி செய்வாய் ஐயா
நெஞ்சமதில் நிம்மதியை நிறைந்துறையச் செய்திடுவாய்
கொழும்பு மாநகர் கோயில் கொண்ட பொன்னம்பல வாணேசுவரப் பெருமானே
எங்கும் நிறைந்துறைந்து எமையாளும் சிவனே
ஏக்கமில்லா வாழ்வினையே உறுதிசெய்வாய் ஐயா
ஏற்றம் தந்திடுவாய், ஏமாற்றம் தடுத்திடுவாய்
கொழும்பு மாநகர் கோயில் கொண்ட பொன்னம்பல வாணேசுவரப் பெருமானே
ஓம் என்ற ஒலியினிலே உள்ளுறையும் சிவனே
ஒற்றுமை மிகு வாழ்வினையே உறுதி செய்வாய் ஐயா
சுகங்கள் தந்திடுவாய் சோகம் தடுத்திடுவாய்
கொழும்பு மாநகர் கோயில் கொண்ட பொன்னம்பல வாணேசுவரப் பெருமானே.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.
