மத்திய மாகாணம்- நுவரெலியா மாவட்டம், அட்டன் மாநகர், அருள்மிகு ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் திருக்கோயில்

எழில் சூழ்ந்த மலையகத்தின் மத்தியிலே அமர்ந்தவனே
வழித்துணையாயிருந் தெம்மை வாழவைக்க வேண்டுமைய்யா
இழிநிலையைப் போக்கிவிடு இன்பநிலை தந்துவிடு
அட்டன் மாநகர் அமர்ந்த மாணிக்கப் பிள்ளையாரே

மலைசூழ்ந்த பெருநகரின் குன்றினிலே இருப்போனே
அலைமோதும் மனங்களுக்கு ஆறுதலைத் தாருமைய்யா
நிலைகுலையா நிம்மதிக்கு உன்னருளைத் தந்துவிடு
அட்டன் மாநகர் அமர்ந்த மாணிக்கப் பிள்ளையாரே
எட்டுத்திக்கும் அருள் பரப்பி அருள் மாரி பொழிபவனே
மட்டில்லாப் பேருவகை வழங்கிடவே வாருமைய்யா
ஓட்டிவிடு தீமைகளை, நிம்மதியைத் தந்துவிடு
அட்டன் மாநகர் அமர்ந்த மாணிக்கப் பிள்ளையாரே
சலித்து நிற்போர் மனங்களிலே நம்பிக்கை தருவோனே
கிலி கொண்ட சூழ்நிலையைப் போக்கிடவே வேண்டுமைய்யா
அஞ்சும் நிலை அகற்றிவிடு அமைதியையும் தந்துவிடு
அட்டன் மாநகர் அமர்ந்த மாணிக்கப் பிள்ளையாரே
வீணர்களின் கொட்டத்தை அடக்கியருள் தருவோனே
வெற்றிகளை நமக்களிக்க விரைந்து உதவிடைய்யா
வீரமிகு வாழ்வுதந்து, மனவுறுதி தந்துவிடு
அட்டன் மாநகர் அமர்ந்த மாணிக்கப் பிள்ளையாரே
வீதிவலம் வந்து நலனருளும் பேரருளே
நம் வழியைச் சீர்செய்ய வந்தருள வேண்டுமைய்யா
நம்பிக்கை தந்தென்றும் நாளும் உடனிரைய்யா
அட்டன் மாநகர் அமர்ந்த மாணிக்கப் பிள்ளையாரே.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.
