நாட்டில் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் எரிபொருள் விநியோகம் தற்போது வழமைக்குத் திரும்பியுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
பல கோரிக்கைகளை முன்வைத்து பெற்றோலிய தொழிற்சங்கங்கள் முன்னெடுத்த வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக எரிபொருள் விநியோகத்தில் சில தாமதங்கள் ஏற்பட்டன.
எவ்வாறாயினும், பாதுகாப்புப் படையினரின் தலையீட்டின் காரணமாக விநியோக நடவடிக்கைகளை வழமைக்கு கொண்டுவருவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், தற்போது பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் பாதுகாப்பில் நாடளாவிய ரீதியில் ஓர்டர் செய்யப்பட்ட எரிபொருள் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கொலன்னாவை எண்ணெய் சேமிப்பு முனையத்தில் இருந்து மட்டும் நேற்று 200இற்கும் மேற்பட்ட எரிபொருள் பௌசர்கள் எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு சென்றுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, நேற்று பிற்பகல் வரை, நாட்டில் எங்கும் வரிசைகள் அல்லது எரிபொருள் பற்றாக்குறை குறித்த தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்று மேலும் தெரிவித்துள்ளது.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் பெரும்பாலான ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை கைவிட்டு வழமை போன்று கடமைகளில் ஈடுபட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
