கிழக்கு மாகாணம்- மட்டக்களப்பு மாவட்டம், பட்டிருப்பு, மண்டூர் அருள்மிகு முருகப்பெருமான் திருக்கோயில்

கிழக்கிலங்கை கோயில் கொண்டு குவலயத்தை ஆள்பவனே
கிலேசமில்லா மனவலிமை தந்திடவே வாருமைய்யா
கிட்டவரும் வேதனைகள் எட்டவே ஓட்டிவிட
அருள்தருவாய் மண்டூர்பதி அமர்ந்தருளும் முருகப் பெருமானே

மயிலேறி உலகளந்து அருள் பொழியும் பெருமானே
மனத்தினிலே நிம்மதியைத் தந்திடவே வாருமைய்யா
மதிப்புமிகு வாழ்வதனை என்றும் நாம் பெற்றுவிட
அருள்தருவாய் மண்டூர்பதி அமர்ந்தருளும் முருகப் பெருமானே

சிவனாரின் இளமகனாய் வந்துதித்த இளங்குமரா
சீரான மனநிலையைத் தந்திடவே வாருமைய்யா
சிந்தனையைச் சீர்செய்து சிவவழியில் வாழ்ந்துவிட
அருள்தருவாய் மண்டூர்பதி அமர்ந்தருளும் முருகப் பெருமானே

சேவற் கொடி தாங்கி காட்சி தரும் வேல்முருகா
சேதமில்லா நல்வாழ்வைத் தந்திடவே வாருமைய்யா
சோகம் அண்டாத எழுச்சியுடன் வாழ்ந்துவிட
அருள்தருவாய் மண்டூர்பதி அமர்ந்தருளும் முருகப் பெருமானே
சூரனின் கொடுமைகளை தடுத்திட்ட குமரேசா
சூழ்நிலையை நலப்படுத்தி அமைதி தந்திடவே வாருமைய்யா
சுற்றமும், உற்றவரும் சிறப்புற்று வாழ்ந்துவிட
அருள்தருவாய் மண்டூர்பதி அமர்ந்தருளும் முருகப் பெருமானே
தமிழ் முழங்கும் திருநிலத்தில் காட்சிதரும் வேலவனே
தளர்வில்லா மனஉறுதி தந்திடவே வாருமைய்யா
திடமாக நாமென்றும் சிறப்புடனே வாழ்ந்து விட
அருள்தருவாய் மண்டூர்பதி அமர்ந்தருளும் முருகப் பெருமானே.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.
