பதுளை – நமுனுகுல தன்னகும்பர தமிழ் வித்தியாலயத்தின் ஓய்வு அறையில் ஏற்பட்ட தீ விபத்தில் அறையில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளது.

இச்சம்பவம் நேற்று மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இனந்தெரியாத நபர்களால் குறித்த பாடசாலையில் உள்ள ஓய்வு அறையின் ஜன்னால் கண்ணாடியை உடைத்து அதனூடாக தீப்பந்தம் அறையினுள் வீசப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

குறித்த அறையில் தீப்பிடித்து அங்கிருந்த கட்டில் போன்ற பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ள நிலையில் ஊர்மக்கள் சேர்ந்து தீயை அணைத்து நிலமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.

சம்பவம் இடம்பெற்ற போது பாடசாலையில் அதிபர் இருக்கவில்லை தீயை அணைத்த பிறகு இன்று 12.30 மணியளவில் பாடசாலைக்கு வந்த அதிபர் சம்பவம் தொடர்பில் செய்தி சேகரிக்க ஊடகவியலாளர்களை அனுமதிக்கவில்லை.
இதேவேளை குறித்த பாடசாலையில் இதற்கு முன்னரும் இதே போன்று தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் இது இப்படியே தொடர்வதாலும் இவ்வாறான ஒரு மோசமான வேலையில் ஈடுபடுவது யாரென கண்டு பிடித்து தருமாறு அப்பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனினும் இத் தீ விபத்து தற்செயலாக இடம்பெற்றதா? அல்லது யாராவது தீ வைத்தார்களா என்பது தொடர்பில் தடவியல் பொலிஸாரின் அறிக்கையின் பின்னரே கண்டு பிடிக்க முடியும் என நமுனுகுல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தடவியல் பொலிஸார் மற்றும் நமுனுகுல பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில் இச்சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதேச மக்கள் சிலர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
