இலங்கைக்கான நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் சுற்றுப் பயணம் நிறைவுக்கு வந்துள்ளது.
ஏற்கனவே மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரினை இலங்கை 2:1 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான டி:20 போட்டி இன்று நிறைவுக்கு வந்துள்ளது.
மூன்று போட்டிகள் கொண்ட டி:20 தொடரில் நியூஸிலாந்து மகளிர் அணி முன்னதாக 2:0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரினை கைப்பற்றி இருந்தது.
இந் நிலையில் மூன்றாவது டி:20 போட்டியானது இன்றைய தினம் கொழும்பு, ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்றது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து மகளிர் அணி, 20 ஓவர்கள் நிறைவில் ஒன்பது விக்கெட் இழப்புக்கு 140 ஓட்டங்களை பெற்றது.
பின்னர் 141 ஓட்டம் என்ற வெற்றியிலக்கினை துரத்திய இலங்கை மகளிர் அணிக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களின் ஆட்டம் இலகுவான வெற்றியை பெற்றுக் கொடுத்தது.
அதன்படி ஆரம்ப வீரர்களாக களமிறங்கிய சமரி அத்தபத்து 80 (47) ஓட்டங்களையும், ஹர்ஷித சமரவிக்ரம 49 (40) ஓட்டங்களையும் ஆட்டமிழக்காது பெற்றுக் கொண்டனர்.
இதனால் இலங்கை 14.3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 143 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது.
இந்த வெற்றியின் மூலம் இலங்கை ஒயிட்வாஷை தவிர்த்ததுடன், நியூஸிலாந்தும் டி:20 தொடரை 2:1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
