கட்டாரின் தோஹாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில், நாணயச் சுழற்சியில் வென்ற இந்திய ‘ஏ’ அணி முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தது. 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 317 ஓட்டங்களைக் குவித்தது இந்தியா.
இந்திய தரப்பில் அபிஷேக் சர்மா 63 பந்துகளில் 11 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 78 ஓட்டங்கள் எடுத்தார். இறுதிக்கட்டத்தில் ஷாபாஸ் அஹமட் ஆட்டமிழக்காமல் 48 பந்துகளில் 4 சிக்ஸர்களுடன் 54 ஓட்டங்கள் விளாசினார். கேப்டன் திலக் வர்மா 53 ஓட்டங்களும், வைபவ் சூர்யவன்ஷி 27 பந்துகளில் 40 ஓட்டங்களும் சேர்த்தனர்.
பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் ரவிந்து பெர்னாண்டோ, ஜனித் லியனகே மற்றும் நிபுன் தனஞ்சய ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
318 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கைத் துரத்திக் களமிறங்கிய இலங்கை ‘ஏ’ அணிக்கு, தொடக்க ஆட்டக்காரர்கள் சினெத் ஜயவர்தன மற்றும் லசித் குரூஸ்புள்ளே இணை அதிரடி தொடக்கம் கொடுத்தது. இந்திய பந்துவீச்சாளர்களின் பந்துகளை நாலாபுறமும் சிதறடித்த இந்த ஜோடி, முதல் விக்கெட்டுக்கே 21.3 ஓவர்களில் 174 ஓட்டங்கள் சேர்த்தது.
சினெத் ஜயவர்தன வெறும் 62 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். 70 பந்துகளில் 10 பவுண்டரிகள், 6 பிரமாண்ட சிக்ஸர்களுடன் 105 ஓட்டங்கள் எடுத்து அவர் ஆட்டமிழந்தார். மறுமுனையில் நிதானமாகவும் வேகமாகவும் ஆடிய லசித் குரூஸ்புள்ளே 98 பந்துகளில் சதமடித்தார். அவர் 107 பந்துகளில் 116 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
அதன்பிறகு களமிறங்கிய நிஷான் மதுஷ்க மற்றும் கேப்டன் பவன் ரத்நாயக்க இணை, அணியை பத்திரமாக வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது.
இறுதியில், 41.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து, 318 ஓட்டங்கள் என்ற இலக்கை எட்டிப் பிடித்து அபார வெற்றி பெற்றது இலங்கை ‘ஏ’ அணி!
