இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் மலையகத்துக்கு அழைத்து வரப்பட்ட மலையக மக்களால் மேற்கொள்ளப்பட்ட ஆபத்தான பயணத்தை நினைவு கூறும் வகையில் மன்னாரில் இருந்து மாத்தளை வரையான பாதயாத்திரையொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஜுலை 29ஆம் திகதி மன்னாரில் ஆரம்பிக்கும் இந்த பயணம் ஆகஸ்ட் 12ஆம் திகதி மாத்தளையில் நிறைவு பெறவுள்ளது.
மலையக பெருந்தோட்டங்களில் தொழில்புரிவதற்காக தென்னிந்தியாவில் இருந்து மலையக மக்கள் அழைத்து வரப்பட்டு 200 வருங்கள் பூர்த்தியாகியுள்ளது. மன்னாரில் தரையிறங்கிய மக்கள் பல்வேறு துன்பங்களுக்கு முகங்கொடுத்து மாத்தளை வரை கால்நடையாக ஆபத்தான பயணத்தை மேற்கொண்டனர்.
மாண்புமிகு மலையகத்திற்கான கூட்டிணைவு, தேசிய கிறிஸ்தவ பேரவை, சிவில் சமூக அமைப்புகள் மற்றும் மலையக சமூகத்துடன் பணிபுரியும் தனிநபர்கள் அடங்கிய ஒரு குழுவினரால், இந்த நடைபவனியானது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மலையக தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நடைபவனி மற்றும் அதனுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கலந்துரையாடல்களில் பங்கேற்குமாறு அனைத்து மக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
