(முஹம்மட் றசீன்)
ஏறாவூர் அல் அஸ்ஹர் வித்தியாலய சூழலில் உள்ள மரங்கள் சிலவற்றை தறித்து அகற்றுவது தொடர்பாக நேற்று ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட குழப்ப நிலைக்கு சுமூகமாக தீர்வு காணப்பட்டது.
இது தொடர்பாக பாடசாலையில் இன்று காலை இடம்பெற்ற கூட்டத்தில் மரங்கள் எவற்றையும் வெட்டி அகற்ற அனுமதி வழங்குவதில்லை என ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.
ஏறாவூர் நகர சபை செயலாளர் எம்.எச்.எம்.ஹமீம் அவர்களின் ஏற்பாட்டில் பிரதேச செயலாளர் நிஹாரா மௌஜூத் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.அமீர், பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.ஜே.எப்.றிப்கா, அதிபர் எம்.வை.எம்.நசீர், பொதுச் சுகாதார பரிசோதகர்பஸ்மீர், சுத்தமானதும் பசுமையானதுமான ஏறாவூரை நோக்கி அமைப்பின் செயற்பாட்டாளர் எம்.ஐ.எம்.றம்ஸி மற்றும் விலைமனுவை பெற்றுக் கொண்ட சகோதரர் இர்பான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இப்பாடசாலையில் மரங்கள் எவற்றையும் வெட்டி அகற்றுவதற்கு இடமளிப்பதில்லை எனவும் பாடசாலைக்கு பாதிப்பாக உள்ள மரக்கிளைகளை மாத்திரம் நகர சபையினால் வெட்டி அகற்றுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
இது தொடர்பாக அரச மரக் கூட்டுத் தாபன அதிகாரிகளுடன் பிரதேச செயலாளர் மற்றும் பாடசாலை அதிபர் தொடர்பு கொண்டு விளக்கமளிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.




