மத்திய மாகாணம் – நுவரேலியா மாவட்டம் – பொகவந்தலாவை வெம்பா தோட்டம் (கில்லார்னி) அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயில்
உயர்வு தந்து வாழவைக்கும் எங்கள் முத்துமாரியம்மா
உடனிருந்து எங்களை நீ காக்க வேண்டும்
உற்றவர்கள், ஊரவர்கள் நலம் பெறவே என்றும்
உறுதுணையாய் இருந்திடுவாய் வெம்பா தோட்டம் உறை தாயே முத்துமாரியம்மா
துன்பங்கள் தடுத்தெமக்குத் துணையிருக்கும் முத்துமாரியம்மா
துணையிருந்து எங்களை நீ வாழவைக்க வேண்டும்
தூய மனம் பெற்றவராய் நாம் வாழ்ந்து நலம் பெறவே
உறுதுணையாய் இருந்திடுவாய் வெம்பா தோட்டம் உறை தாயே முத்துமாரியம்மா
மகிழ்வு நிறை வாழ்வு தந்து வாழவைக்கும் முத்துமாரியம்மா
மதி தவறா நெறி நின்று எங்களை நீ வழிநடத்த வேண்டும்
மாற்றமில்லா நன்மைகளை நாம் என்றும் பெற்றிடவே
உறுதுணையாய் இருந்திடுவாய் வெம்பா தோட்டம் உறை தாயே முத்துமாரியம்மா
மலை சூழ்ந்த பெருநிலத்தில் வந்துறையும் முத்துமாரியம்மா
மானத்துடன் வாழ எங்களை நீ வழிநடத்த வேண்டும்
மரியாதை பெற்று நாம் வாழ்வில் உயர்ந்திடவே
உறுதுணையாய் இருந்திடுவாய் வெம்பா தோட்டம் உறை தாயே முத்துமாரியம்மா
தலை தாழா வாழ்வு தந்து தாங்கி நிற்கும் முத்துமாரியம்மா
தலைநிமிர்ந்து வாழும் நிலைதந்து வாழவைக்க வர வேண்டும்
திரண்டு வரும் தீமைகள் எமை விட்டு நீங்கிடவே
உறுதுணையாய் இருந்திடுவாய் வெம்பா தோட்டம் உறை தாயே முத்துமாரியம்மா
வெற்றி நிறை வாழ்வு தரும் எங்கள் முத்துமாரியம்மா
வெறுமையில்லா வாழ்வுதந்து வாழவழி தரவேண்டும்
வேண்டும் நலம் தந்தெம்மை உயர் நிலையில் இருத்திடவே
உறுதுணையாய் இருந்திடுவாய் வெம்பா தோட்டம் உறை தாயே முத்துமாரியம்மா.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.