வெலிக்கடை பொலிஸ் காவலில் வைத்து உயிரிழந்த பணிப்பெண் ராஜன் ராஜகுமாரியின் மரணம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இரண்டு பொலிஸ் சார்ஜன்ட்கள் மற்றும் கான்ஸ்டபிள் ஒருவரையும் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேகநபர்களை அன்றைய தினம் அடையாள அணிவகுப்பில் ஆஜர்படுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரும் நேற்று(01) மாலை கொழும்பு மேலதிக நீதவான்
ஹர்ஷன கெகுனுவலவின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளில் தெரியவந்த விடயங்களின் அடிப்படையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் மெரில் ரஞ்சன் லமாஹேவா உள்ளிட்ட அதிகாரிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்கள் மூவரையும் கண்டால் அடையாளம் காண முடியும் என பல சாட்சிகள் கூறியுள்ள நிலையில், அவர்களை அடையாள அணிவகுப்புக்கு அழைத்துச் செல்ல உத்தரவிடுமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த சந்தேகநபர்கள் பொலிஸ் உத்தியோகத்தர்கள் என்பதால் சிறைச்சாலையில் அவர்களின் பாதுகாப்பு தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு உத்தரவு பிறப்பிக்குமாறு சந்தேகநபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி பி.பிரியங்க நீதிமன்றத்தை கோரினார்.
அதற்கு பதிலளித்த நீதவான், அவ்வாறானதொரு உத்தரவை தன்னால் பிறப்பிக்க முடியாத போதிலும், இந்த சந்தேகநபர்கள் பொலிஸ் உத்தியோகத்தர்கள் என்பதை சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அறிவிக்குமாறு கூறினார்.
முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை பரிசீலித்த நீதவான், குறித்த மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களையும் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதுடன், அன்றைய தினம் அவர்களை அடையாள அணிவகுப்புக்கு அனுப்புமாறும் உத்தரவிட்டார்.