இலங்கை அணியை 10 விக்கெட்டுகளினால் வீழ்த்திய இந்தியா எட்டாவது முறையாகவும் நேற்று ஆசியக் கிண்ணத்தை கைப்பற்றியது.
இந் நிலையில், முக்கியமான இறுதிப் போட்டியில் தோல்வியடைந்ததற்கு இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் தசுன் சானக்க வருந்துவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கை அணிக்கு ஆதரவளிப்பதற்காக போட்டியை காண்பதற்கு வருகை தந்திருந்த அதிக எண்ணிக்கையிலான ரசிகர்களுக்கும் நன்றியை தெரிவித்தார்.
மேலும் நேற்றைய ஆட்டத்தில் ஏழு ஓட்டங்களுக்கு ஆறு விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் சிராஜ்ஜுக்கும், எட்டாவது முறையாக ஆசியக் கிண்ணத்தை வென்ற இந்திய அணிக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
” இது சிராஜின் சிறப்பான பந்துவீச்சு, அவர் ஆட்டத்தில் எப்படி செயல்பட்டார் என்பது அவருக்கு பெருமை.
துடுப்பாட வீரரர்களுக்கு இது ஒரு நல்ல ஆடுகளமாக இருக்கும் என்று நான் நினைத்தேன்.
ஆனால் மேகமூட்டமான சூழ்நிலை ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி, பந்துவீச்சுக்கு சாதகமாக மாறியது.
இது கடினமான நாள். நாம் இன்னும் கொஞ்சம் வினைதிறனுடன் இருந்திருக்க வேண்டும்” என்றார்.
மேலும், இந்த போட்டியில் தமது பல வீரர்களின் செயல்திறனுக்காக அவர்களை பெருமையாக பேசிய சானக்க, சரித் அசலங்க, குசல் பெரேரா மற்றும் சதீர சமரவிக்ரம ஆகியோர் வருங்கால நட்சத்திரம் என பாராட்டினார்.
கொழும்பு, ஆர்.பிரேமதாச மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 15.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 50 ஓட்டங்களை மாத்தரம் பெற்றது.
பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 6.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி வெற்றி பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
