லெபனானில் 4 மாடிக் கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் இலங்கைப் பெண் ஒருவர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
கம்பஹா, மிரிஸ்வத்தை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரே இந்த விபத்தில் காயமடைந்துள்ளதாக, ஊடகப் பேச்சாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்துள்ளார்.
“லெபனானில் உள்ள பெரூப் நகருக்கு அருகில் உள்ள பகுதியில் நேற்று 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது. இந்த கட்டிடத்தில் இலங்கை பெண் உள்ளிட்ட 5 பேர் சிக்கியுள்ளதாக தூதரகம் அறிவித்துள்ளது.
குறித்த இலங்கை பெண் கம்பஹா, மிரிஸ்வத்தையில் வசிக்கும் 65 வயதானவர். இது தொடர்பில் மேலதிக தகவல்களை தூதரகம் வெளியிட்டதும், உரிய தரப்பினருக்கு அறிவித்து தேவையான நடவடிக்கைகளை எடுப்போம்.” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
செவ்வாய்கிழமை, லெபனானில் உள்ள இலங்கை தூதரகம், தெற்கு லெபனானில் பணிபுரியும் இலங்கையர்களை உடனடியாக தூதரகத்தில் தம்மைப் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
தெற்கு லெபனானில் பணிபுரியும் இலங்கையர்கள் 070386754 மற்றும் 071960810 என்ற தொலைபேசி இலக்கங்கள் ஊடாகவோ அல்லது slemb.beirut@mfa.gov.lk என்ற மின்னஞ்சல் ஊடாகவோ தமது பெயர்கள் மற்றும் தொடர்பு இலக்கங்களை தூதரகத்திற்கு வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
