வடமாகாணம் – வவுனியா மாவட்டம் செட்டிக்குளம் – அருள்மிகு – சித்தி விநாயகர் திருக்கோயில்
வளம் கொண்ட தமிழ் நிலத்தில் அமர்ந்தருளும் விநாயகரே
வளம் குன்றா எதிர்காலம் உறுதி செய்ய வாருமைய்யா
வெற்றிநடை போட்டு நாம் முன்சென்று நலம் பெறவே
உடனிருப்பாய் செட்டிக்குளம் கோயில் உறை சித்தி விநாயகப் பெருமானே
அகிலமெல்லாம் ஆளுகின்ற ஆதி சிவனார் மகனே
அச்சமில்லா எதிர்காலம் உறுதி செய்ய வாருமைய்யா
நேர்மையுடன் என்றும் நாம் நிலைபெற்று வாழ்த்திடவே
உடனிருப்பாய் செட்டிக்குளம் கோயில் உறை சித்தி விநாயகப் பெருமானே
பாரெங்கும் நல்லருளைப் பரப்பிவிடும் பார்வதியின் புத்திரனே
புகழ்பூத்த நற்காலம் உறுதிசெய்ய வாருமைய்யா
பெருமை குன்றா நிலை பெற்று நாமென்றும் திகழ்ந்திடவே
உடனிருப்பாய் செட்டிக்குளம் கோயில் உறை சித்தி விநாயகப் பெருமானே
மருதநிலச் சூழலிலே குடியமர்ந்த கோமகனே
மகிழ்ச்சி நிறை பெருவாழ்வை தந்தருள வாருமைய்யா
மாசில்லா எதிர்காலம் நாமென்றும் அடைந்திடவே
உடனிருப்பாய் செட்டிக்குளம் கோயில் உறை சித்தி விநாயகப் பெருமானே
பாவங்கள் துடைத்தெறிந்து அருளளித்துக் காப்பவரே
பொருள் பொதிந்த வாழ்நாளைத் தந்தருள வாருமைய்யா
போட்டிகளில் வெற்றி பெற்று நாமென்றும் முன்செல்ல
உடனிருப்பாய் செட்டிக்குளம் கோயில் உறை சித்தி விநாயகப் பெருமானே
உறுதிகொண்ட வாழ்வுதந்து எமை அணைக்கும் விநாயகரே
ஏற்றமிகு வருங்காலம் தந்தருள வாருமைய்யா
நிம்மதியை நாமென்றும் நிரந்தரமாய் பெற்றுவிட
உடனிருப்பாய் செட்டிக்குளம் கோயில் உறை சித்தி விநாயகப் பெருமானே.
ஆக்கம் – த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.