கோ.ந.மீனாட்சியம்மாள் படைப்புகள் பற்றிய நூல் கொட்டக்கலையில் வெளியிடப்பட்டது.
(கவிஷான் – ஆர்கே)
தேசிய கலை இலக்கிய பேரவையின் ஏற்பாட்டில் கோ.ந. மீனாட்சியம்மாள் படைப்புகள் பற்றிய நூல் வெளியீடு இன்றைய தினம் (19) கொட்டக்கலை அரசினர் ஆசிரியர் கலாசாலையின் பேராசிரியர் சோ. சந்திரசேகர் மண்டபத்தில் இடம்பெற்றது.
பிற்பகல் 02.00 மணிக்கு ஆரம்பமான குறித்த நிகழ்வின் முதல் அம்சமாக மறைந்த மலையக எழுத்தாளர் லெனின் மதிவாணன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன் பின்னர் திரு ஜெ. சற்குருநாதன் அவர்கள் வரவேற்பு உரையினையும் தலைமை உரையினையும் வழங்கினார். அதனை தொடர்ந்து சில சிறப்பு பிரதிகள் வழங்கி வைக்கப்பட்டதோடு பத்தனை ஸ்ரீ பாத கல்வியற் கல்லூரியின் ஓய்வுநிலை பீடாதிபதி திரு வ. செல்வராஜ் அவர்களினதும் திரு. சு. தவச்செல்வன் ஆகியோரதும் விமர்சன உரைகள் இடம்பெற்றன. இதற்க்கான ஏற்புரையை நூலாசிரியர் திரு.எம் எம். ஜெயசீலன் வழங்கினார். இந்நிகழ்வின் நன்றியுரையை ஆசிரியர் வி. சுதர்சன் அவர்கள் வழங்கியிருந்தார். ஆசிரியர் கலை அவர்கள் நிகழ்வை தொகுத்து வழங்கியது சிறப்பம்சமாகும்.
மேலும் மலையகத்தின் மூத்த எழுத்தாளர் மு.சிவலிங்கம் மற்றும் எழுத்தாளர் மொழிவரதன், சிவனு மனோகரன் தேசிய கலை இலக்கியப் பேரவை உறுப்பினர்கள், வாசகர்கள் என பலரும் கலந்துக்கொண்டிருந்தனர்.