நானுஓயா நிருபர்
நாட்டில் மழையுடன் கூடிய காலநிலை தீவிரமடைந்துள்ள நிலையில் நாட்டின் பல பகுதிகளில் கடும் மழைவீழ்ச்சி பதிவாகிய நிலையில் காணப்படுகின்றது.
இதில் மலையக பிரதேசங்களில் கடுமையான மழை மற்றும் பலத்த காற்றும் வீசி வருகின்றது இதனால் நானுஓயா டெஸ்போட் (சினிக்கத்தாளை) பகுதியில் இரண்டு வீடுகள் மீது மரம் ஒன்று அடியோடு பெயர்ந்து விழுந்தமையால் வீடுகளின் மேற்கூரை நொறுங்கியதுடன், வீட்டினுள் இருந்த பாத்திரங்கள் சேதமடைந்து சுவர்களும் பாதிக்கப்பட்டுள்ளது. எனினும் குறித்த வீடுகளில் யாரும் இல்லாததால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரியவருகிறது.
இச் சம்பவம் செவ்வாய்க்கிழமை (09) இரவு இடம்பெற்றுள்ளது. குறித்த வீடுகளுக்கு அருகாமையில் இருந்த மரம் ஒன்று காற்றின் வேகத்தாலும் மழையின் தாக்கத்தாலும் வீட்டின்மேல் விழுந்தமையால் இந்த வீடுகள் பலத்த சேதத்துக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாதிக்கப்பட்ட வீடுகளை இப்பகுதிக்கு பொறுப்பான கிரிமிட்டி 476/A கிராமசேவகர் பார்வையிட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பில் நுவரெலியா பிரதேச சபையில் கவனத்திற்கும், நுவரெலியா மாவட்ட இடர்முகாமைத்துவ மத்திய நிலைய அதிகாரிகள் ஆகியோரின் கவனத்திற்கும் கொண்டு வரப்பட்டுள்ளது.
எனவே வானிலை முன்னறிவிப்புகளை தொடர்ந்து தெரிந்துகொண்டும் , உள்ளூர் அதிகாரிகள் வழங்கும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு வானிலை ஆய்வு மையம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
