“மலைநாட்டு தசாப்தம்” பத்தாண்டு பல்நோக்கு கிராமிய மற்றும் சமூக அபிவிருத்தி வேலைத்திட்டம் ஜூலை 31 ஆம் திகதிக்கு முன்னர் நிறைவு செய்யப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
மார்ச் மாதத்துக்குள் மலையக தசாப்த வேலைத்திட்டம் தொடர்பான அனைத்து ஒதுக்கீடுகளும் மாவட்ட செயலகங்களுக்கு வழங்கப்படும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதன் மூலம் 2021 முதல் 2023 வரையிலான ஆண்டுகளில் ஆரம்பிக்கப்பட்டு நகரங்கள் மத்தியில் உள்ள அபிவிருத்தித் திட்டங்களை முடிக்க முடியும் என்றும் அமைச்சர் கூறினார்.
மலைநாட்டு எழுச்சி தசாப்தம் அபிவிருத்தி வேலைத்திட்டம் தொடர்பில் இரத்தினபுரி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அதிகாரிகளுக்கு அறிவிக்கும் வகையில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இன்று (31) இதனைத் தெரிவித்தார். இது இரத்தினபுரி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
மலைநாட்டு எழுச்சி தசாப்தம் திட்டம் இந்த ஆண்டு 10 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும். அந்த மாவட்டங்கள் கண்டி, மாத்தளை, நுவரெலியா, இரத்தினபுரி, கேகாலை, மாத்தறை, காலி, களுத்துறை, பதுளை மற்றும் குருநாகல் ஆகும்.
இந்த வேலைத்திட்டத்திற்கான திட்ட முன்மொழிவுகள் பிரதேச மட்டத்தில் தயாரிக்கப்பட்டு பெப்ரவரி மாத இறுதிக்குள் பிரதேச செயலாளர் குழுக்களின் பரிந்துரையுடன் மாவட்ட குழுக்களுக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டுமெனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது, அபிவிருத்தித் திட்டங்களைக் கண்டறிதல், உத்தியோகத்தர்களுக்கு உறுதுணையாக மதிப்பீடுகளை தயாரித்தல், திட்டத்தை நடைமுறைப்படுத்துதல், மக்களுக்குத் தெரியப்படுத்துதல் மற்றும் திட்டத்தை நிறைவு செய்தல் ஆகிய பணிகளை கிராமியக் குழுக்களே மேற்கொள்ளும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
திட்டங்களுக்கான மதிப்பீடுகளை தயாரிக்கும் போது மக்களுக்கு தெரியப்படுத்துவதன் மூலம் அரசியல்வாதிகள் கொமிசன் பெறுவதாக சமூகத்தில் நிலவும் பொய்யான கருத்தை மாற்றியமைக்க முடியும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மலைநாட்டு எழுச்சி தசாப்தம் வேலைத்திட்டம் 10 மாவட்டங்களில் உள்ள 89 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 4,498 கிராம சேவகர் பிரிவுகளில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதற்காக கடல் மட்டத்திலிருந்து 200 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் அமைந்துள்ள பிரதேச செயலாளர் பிரிவுகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
இரத்தினபுரி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு அதன் தலைவர் அகில எல்லாவல மற்றும் சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவீன் திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது.
இரத்தினபுரி மாவட்டத்தில் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் 489 கிராம சேவகர் பிரிவுகளிலும் இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட உள்ளதாக அமைச்சர் இங்கு உரையாற்றினார். அஹெலியகொட, குருவிட்ட, கிரியெல்ல, இரத்தினபுரி, இம்புல்பே, பலாங்கொடை, ஓபநாயக்க, பெல்மடுல்ல, கொலன்ன, அயகம, கலவான, எம்பிலிப்பிட்டிய, கஹவத்த மற்றும் கொடகவெல ஆகியன அந்தப் பிரதேச செயலகப் பிரிவுகளாகும்.
இரத்தினபுரி மாவட்டத்திற்கான அபிவிருத்தி நிதி ஒதுக்கீடுகள் தொடர்பிலும் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. இவ்வருடம் இரத்தினபுரி மாவட்டத்திற்கு அபிவிருத்தி நிதியின் கீழ் 2,832 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த தொகையில் 1,400 மில்லியன் ரூபா மலைநாட்டு எழுச்சி தசாப்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக பெறப்பட்டுள்ளது.
நாட்டின் மலைநாட்டுப் பிரதேசங்களில் வாழும் மக்களின் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக மலை மலைநாட்டு எழுச்சி தசாப்தம் எனப்படும் பத்தாண்டு கால பல்நோக்கு கிராமப்புற மற்றும் சமூக மேம்பாட்டுத் திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இந்த வேலைத்திட்டத்திற்காக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சுக்கு இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள தொகை 10,000 மில்லியன் ரூபாவாகும். இதன் கீழ் ஒரு பிரதேச செயலகத்திற்கு தலா 100 மில்லியன் ரூபா கிடைக்கும்.
இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 10 முக்கிய அபிவிருத்திப் பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதாவது வாழ்வாதாரம், சந்தை அபிவிருத்தி மற்றும் சுற்றுலாத் துறை மேம்பாடு, கல்வி, குடிநீர் வசதி, விவசாயம் மற்றும் சிறு நீர்ப்பாசனம், மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்கவை, தொலைபேசி மற்றும் இணையம், சுகாதாரம் மற்றும் ஆரோக்கியம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பேரிடர் முகாமைத்துவம் மற்றும் வீட்டு வசதிகளை மேம்படுத்துதல். மலை பிரதேசங்களில் வாழும் பெருந்தோட்ட சமூகங்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு விரைவான மற்றும் திட்டமிடப்பட்ட அணுகுமுறையை மேற்கொள்வதே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும்.
இத்திட்டத்திற்கான மாவட்ட மற்றும் பிரதேசக் குழுக்களின் இணக்கப்பாடு கிடைத்த பின்னர், மாவட்ட செயலாளர்களின் முழு ஈடுபாட்டுடனும், ஏனைய அரச நிறுவனங்கள் மற்றும் பிரதேச செயலகங்களின் பூரண ஆதரவுடனும் கூட்டுத் திட்டமாக நடைமுறைப்படுத்தப்படும். இந்த திட்டத்தை ஜனாதிபதி அலுவலகம், நிதி பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சு மற்றும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சும் மேற்பார்வை செய்கிறது.
இந்நிகழ்வில் வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சி, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர, பாராளுமன்ற உறுப்பினர் முதிதா பிரியதர்ஷனி, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ. எஸ். சத்யானந்த, இரத்தினபுரி மாவட்ட செயலாளர் வசந்த குணரத்ன மற்றும் அரச அதிகாரிகள் குழுவினர் கலந்துகொண்டனர்.
முனீரா அபூபக்கர்
