மஸ்கெலியா நிருபர் செ.தி.பெருமாள்.05.03.2024.
மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் வறட்சியான காலநிலையை சாதகமாக பயன்படுத்தி சிலர் மலையகத்தில் உள்ள காட்டு நிலங்களுக்கு தீ மூட்டி வருவதாகவும், இதன் காரணமாக நீர் ஆதாரங்கள் வேகமாக வற்றி வருவதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.
மலையகத்தில் அமைந்துள்ள முக்கிய நீர்த் தேக்கங்களின் நீர்மட்டம் கூட வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதாகவும், பல குடிநீர் ஊற்றுகள் வறண்டு காணப்படுவதாகவும், மலையகத்தில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
மலையகத்தின் பல தோட்டப் பகுதிகளிலுள்ள மக்கள் கடும் வறட்சியான கால நிலையினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சில தோட்டங்களில் உள்ள மக்கள் தற்போது குடிநீர் பிரச்சினையால் அவதிப் படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பிரதான நீர்த்தேக்கங்கள், சிறிய நீர்த்தேக்கங்கள், ஏரிகள், குளங்கள், நீர்வீழ்ச்சிகள், ஆறுகள் மற்றும் கால்வாய்கள் மற்றும் குடிநீர் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதாக மலையக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

