நானுஓயா நிருபர்
நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் நந்தன கலபட தலைமையில் ஏற்பாட்டில் 476/ஏ கிரிமிட்டி கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் வசிக்கும் பொது மக்களுக்கான நடமாடும் சேவை ஒன்று புதன்கிழமை (27) நானுஓயா டெஸ்போட் வைத்தியசாலையில் இடம்பெற்றது.
குறித்த நடமாடும் சேவையில் ஆயுர்வேத வைத்தியப் பிரிவு, பற் சிகிச்சை பொலிஸ் பிரிவு, பிறப்பு, இறப்பு, திருமணப் பதிவுப் பிரிவு, தேசிய அடையாள அட்டைக்காக முதன்முறையாக விண்ணப்பித்தல், தேசிய அடையாள அட்டையைப் புதிப்பித்தலுக்காக விண்ணப்பித்தல், தொலைந்த அடையாள அட்டைக்காக விண்ணப்பித்தல் போன்ற பிரிவுகளில் பொது மக்களுக்கு சேவைகள் வழங்கி வைக்கப்பட்டது.
இதன்போது தேசிய அடையாள அட்டைக்காக விண்ணப்பித்தலின் போது பொலிஸ் முறைப்பாடு, மற்றும் புகைப்படம் எடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
அத்துடன் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு பிரசவத்தின் போது தேவையான பொருட்கள் அடங்கிய பொதி ஒன்றும் வழங்கப்பட்டது .
மேற்படி நடமாடும் சேவையில் தேசிய அடையாள அட்டை பெறுவதற்காக பொது பொலிஸ் உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள், சமாதான நீதவான் ஆகியோர் தங்களது சேவைகளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

