மின்சாரம் தாக்கி உயிரிழந்த கவரவில தோட்ட இளைஞருக்கு
50 இலட்ச ரூபா நாட்ட ஈடு வழங்கப்பட்டுள்ளது.
மின்சாரம் தாக்கி உயிரிழந்த சாமிமலை கவரவில தோட்டத்தைச் சேர்ந்த நல்லையா சிவகுமார் என்ற 33 வயது இளைஞரின் மரணத்துக்கு, தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் மேற்கொண்ட பேச்சுவார்த்தையின் பயனாக ஹொரண பிளாண்டேசன் நிர்வாகத்தின் ஊடாக 50 இலட்ச ரூபா நட்ட ஈடு வழங்கப்பட்டுள்ளது. அதற்கான காசோலைகள் வைப்பிலிடப்பட்டு குடும்பத்தாரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அத்தோடு இறந்தவரின் மனைவிக்கு சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் வேலையும் வழங்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும், அம்பகமுவ பிரதேச சபையின் முன்னாள் தலைவருமான ஜி. நகுலேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கவரவில தோட்டத்தைச் சேர்ந்த இளைஞர் சிவகுமார் 2022 நவம்பர் மாதம் 24 ஆந் திகதி தோட்டத் தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருக்கும் போது மின்சாரம் தாக்கப்பட்ட நிலையில் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டும் மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி டிசம்பர் மாதம் 5 ஆந் திகதி உயிரிழந்துள்ளார்.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் அங்கத்தவரான நல்லையா சிவகுமாரின் பூதவுடலுக்கு சங்கத்தின் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம், பொதுச் செயலாளர் எஸ். பிலிப், தேசிய அமைப்பாளர் நகுலேஸ்வரன் சகிதம் கவரவில தோட்டத்துக்கு நேரடியாக விஜயம் செய்து அஞ்சலி செலுத்திய பின்னர், கவரவில தோட்ட முகாமையாளர் கமில்ச, ஹொரண பிளாண்டேசன் இயக்குனர் வசந்த குணவர்தன ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.
அதற்கமைய இறந்தவருக்கு 50 இலட்ச ரூபா நட்ட ஈடு வழங்கவும், அதில் அவரது மூன்று பிள்ளைகளான மகன்மார் கிஷோர், மிதுன் ஜனார்த்தன், மகள் சக்தி ஆகியோருக்கு தலா 10 இலட்சம் வீதம் 30 இலட்ச ரூபாவும், அவரது மனைவி சுஜீவாவுக்கு 20 இலட்ச ரூபாவுடன் சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் வேலையும், வீடமைப்புக்கு காணியும் வழங்க இணக்கம் காணப்பட்டிருந்தது. அதன்படி அவர்களின் பிறப்புச் சான்றிதழ்கள், வங்கிக் கணக்கு புத்தகங்கள் முதலான ஆவணங்கள் தோட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன, காசோலைகளை வைப்பிலிட்டு வங்கிப் புத்தகங்களை தோட்ட முகாமையாளர் கமில்ச குடும்பத்தாரிடம் கையளித்துள்ளார்.
இது சம்பந்தமாக நேற்று வியாழக்கிழமை தோட்டத்தில் இடம்பெற்ற நிகழ்வில் தேசிய அமைப்பாளர் நகுலேஸ்வரன் தலைமையில் பிரதேச அமைப்பாளர்கள் சோமதேவன், பாலா மற்றும் தோட்டக் கமிட்டித் தலைவர்களும் குடும்பத்தாரும் கலந்து கொண்டார்கள்.