வவுனியா நகரையண்டிய, தேக்கவத்தை பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் வைத்து 15 வயது சிறுமி கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுக்கமைய தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா, பண்டாரிக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசித்து வந்த 15 வயது பெண் ஒருவரை கடந்த ஜனவரி மாதம் வவுனியா நகரையண்டிய பகுதியில் தேக்கவத்தையில் உள்ள விடுதி ஒன்றிக்கு அழைத்து சென்ற இளைஞர் ஒருவர் குறித்த சிறுமிக்கு போதை மருந்து கொடுத்து கூட்டு வன்புணர்வில் ஈடுபட்டதாக பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
இம்மாதம் சிறுமியின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து பெற்றோர் சிறுமியிடம் விசாரித்ததில் சிறுமி கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டமை தெரியவந்துள்ளது. இதனையடுத்து சிறுவர் பிரிவு உத்தியோகத்தர்களை அணுகிய சிறுமியின் பெற்றோர் அவர்களின் வழிப்படுத்தலில் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.
முறைப்பாடு தொடர்பில் விசாரணை செய்த வவுனியா பொலிஸார் கூட்டு வன்புணர்வுக்கு உடந்தையாக செயற்பட்டதாக அவரது உறவினரான 20 வயது பெண் ஒருவரையும், வன்புணர்வில் ஈடுபட்ட சந்தேகத்தில் வவுனியா நகரப் பகுதியில் உள்ள தொலைபேசி விற்பனை நிலையத்தில் கடமையாற்றும் இளைஞன் உட்பட மூன்று இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நான்கு பேரும் வவுனியா நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கமைய தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், சிறுமியிடம் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.