இந்தோனேசியாவில் நடைபெறவுள்ள 10 ஆவது உலக நீர் உச்சி மாநாட்டின் உயர்மட்ட அமர்வில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பாலியில் உள்ள குஸ்தி நுரா ராய் சர்வதேச விமான நிலையத்தை (Gusti Ngurah Rai) (18) சென்றடைந்தார்.
இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோவின் (Joko Widodo) அழைப்பின் பேரில், ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொண்டிருக்கிறார். இதன்போது விமான நிலையத்தில் ஜனாதிபதிக்கு இந்தோனேசிய எரிசக்தி மற்றும் கனிம வள அமைச்சர் அரிபின் தஸ்ரிஃப் (Arifin Tasrif) இந்தோனேசியாவுக்கான இலங்கைத் தூதுவர், அட்மிரல் பேராசிரியர் ஜெயநாத் கொழும்பகே, இலங்கைக்கான இந்தோனேசியத் தூதுவர் தேவி குஸ்டினா டோபிங் (Devi Gustina Tobing) ஆகியோரால் ஜனாதிபதிக்கு சிறப்பு வரவேற்பளிக்கப்பட்டது.
இதன் போது இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன், பாரம்பரிய பாலி நடனக் கலைஞர்களின் நடன நிகழ்வும் இடம்பெற்றது.
10 ஆவது உலக நீர் உச்சி மாநாட்டின் உயர்மட்ட அமர்வு மே 18 – 20 வரை இந்தோனேசியாவின் பாலி நகரில் “கூட்டு செழுமைக்கான நீர்” என்ற தொனிப்பொருளில் நடைபெறவுள்ளதுடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மே 20 ஆம் திகதி மாநாட்டில் சிறப்புரை ஆற்றவுள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் உலகப் புகழ்பெற்ற வர்த்தகர் Elon Musk ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்றும் இன்று (19) இடம்பெற்றது. இலங்கையில் “Starlink” சேவை வசதியை அமுல்படுத்துவது தொடர்பில் இதன்போது ஆராய்ப்பட்டது.
உலகளாவிய “Starlink” வலையமைப்புடன் இலங்கையை இணைப்பதற்கான விண்ணப்ப செயல்முறையை விரைவுபடுத்துவது குறித்தும் இந்த சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டது.