வி.தீபன்ராஜ்
நாட்டில் இடம்பெற்றுவரும் சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியாவிலும் தற்பொழுது நிலவி வரும் கடும் மழை மற்றும் காற்றுடன் கூடிய மோசமான காலநிலை காரணமாக நுவரெலியா பம்பரகலை பகுதியில் இன்று காலை (28) வீடு ஒன்றின் மீது மரம் ஒன்று முறிந்து விழுந்தமையால் குறித்த வீட்டுக்கு செல்லும் மின்வயர் அறுந்து விழுந்து வீடு தீப்பிடித்துள்ளது
இதனால் வீட்டின் உள் பகுதி முழுமையாக எரிந்துள்ளதுடன் இலத்திரனியல் பொருட்கள் உட்பட அதிகமான பொருட்கள் சேதமடைந்துள்ளன.
குறித்த வீட்டில், வசிப்பவர்கள் வெளியில் சென்றிருந்த சமயம் வீட்டின் அருகாமையில் இருந்த மரம் ஒன்று காற்றின் வேகத்தாலும் மழையின் தாக்கத்தாலும் வீட்டின்மேல் விழுந்தமையால் வீட்டிற்கு செல்லும் மின்வயர் அறுந்து விழுந்து ஏற்பட்ட மின்கசிவு காரணமாக திடீரென வீட்டினுள் தீ பற்றி எரிந்துள்ளது.
குறித்த சம்பவத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனவும் தீப்பரவலுக்கு மின் ஒழுக்குகே காரணம் என வீட்டின் உரிமையாளர் தெரிவித்தார்.
குறித்த தீயினை அயலவர்களின் உதவியுடன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.