டி.சந்ரு செ.திவாகரன்
நுவரெலியா – தலவாக்கலை பிரதான வீதியில் இ.போ.ச பேருந்துக்கள் திடீரென்று நிறுத்தம் – பாடசாலை மாணவர்கள் அவதி.
நுவரெலியா – தலவாக்கலை பிரதான வீதியில் இருந்து நாவலர் தமிழ் மகா வித்தியாலயம் ,
பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரி ,
காமினி தேசிய பாடசாலை , நல்லாயன் மகளீர் கல்லூரி போன்ற அரச மற்றும் தனியார் பாடசாலைகளுக்கு செல்லும் மாணவர்கள் காலை வேளையில் உரிய நேரத்திற்கு பேருந்து சேவையில் ஈடுபடாமையினால் பாடசாலை மாணவர்களும் தொழில் துறைக்குச் செல்வோரும் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வீதியில் தினமும் சேவையில் இருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான மூன்றுக்கும் மேற்பட்ட பேருந்துக்கள் திடீரென நிறுத்தப்பட்டுள்ளமையால் பயணிக்கும் நூற்றுக்கணக்கான மாணவர்கள், அன்றாட தொழிலுக்குச் செல்வோர் சீரான பஸ் போக்குவரத்து இல்லாமல் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.
குறிப்பாக கிலாரண்டன்,டெஸ்போட்,கிரிமிட்டி,வாழைமலை.அவோக்கா,கார்லிபேக் போன்ற பிரதேசத்தை சேர்ந்த பாடசாலை மாணவர்களும் , பொதுமக்களுமே இவ்வாறு தொடர்ந்து அசௌகரியங்களுக்குள்ளாகி வருவதாக கவலை தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான மூன்றுக்கும் மேற்பட்ட பேருந்துக்கள் திடீரென நிறுத்தப்பட்டுள்ளமையால் காலை 6:30 தலவாக்கலையில் இருந்து நுவரெலியா நோக்கி புரப்பட்டு டெஸ்போட், கிரிமிட்டி வழியாக காலை 7:20 மணியளவில் செல்லும் பேருந்து சனம் நிரம்பி வருவதாகவும் ,அதில் ஏறி பயணம் செய்ய இயலாத நிலை ஏற்படுவதாகவும் , இதிலும் இ.போ.ச பேருந்திற்கான மாதாந்த பருவ சீட்டு பெற்றுக்கொண்டவர்கள் முச்சக்கரவண்டிகளிலேயே ,வேறு வாகனங்களிலேயே செல்ல வேண்டியிருக்கிறது. இதில் கிலாரண்டன் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் நானுஓயா பிரதான நகருக்கும் , நானுஓயா நாவலர் பாடசாலைக்கு மூன்று ,நான்கு கிலோமீற்றர் தூரம் நடந்தே செல்கின்றனர் இதனால் உரிய நேரத்தில் பாடசாலைக்கோ, அலுவலகங்களுக்கோ செல்லமுடியாமல் மீண்டும் தமது வீடுகளுக்கே செல்லவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவதாகவும் ,
இவ்வீதியில் காலை நேரங்களில் குறிப்பிட்ட நேரங்களில் அரச பேருந்துகள் சேவையில் ஈடுபடாமையால் இப்பிரதேச மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ளதாக பெற்றோர் கவலை தெரிவிக்கின்றனர்.
எனவே இப்பிரதேச மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் நலனை கருத்திற் கொண்டு பாடசாலை நேரங்களில் சீரான பேருந்து சேவையை வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன் வரவேண்டும் என இப்பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.