பதுளை சரஸ்வதி தேசிய கல்லூரியின் ஓய்வுநிலை பொருளியல் பாட ஆசான் கந்தையா சக்திவேல் அவர்கள் தனது 67 ஆவது வயதில் இன்று இயற்கை எய்திய செய்தி பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பதுளை நகருக்கு அண்மையில் உள்ள கலன் தோட்டத்தில் பிறந்து பல்வேறு சவால்களுக்கு மத்தியில் பாடசாலை கல்வியை நிறைவு செய்ததுடன் பல்கலைக்கழகம் சென்று பொருளியல் பட்டம் பெற்று, தனது ஆசிரியப் பணியை பதுளை சரஸ்வதி மகா வித்தியாலயத்தில் ஆரம்பித்து பணி ஓய்வு வரை சேவையாற்றி இருந்தார்.
உயர்தர கலை, வர்த்தகப் பிரிவு மாணவர்களுக்கு பொருளியல் பாடத்தை கற்பித்து பலர் பல்கலைக்கழகம் செல்ல வழி காட்டியது மட்டுமன்றி உயர் தரத்தில் சித்திப் பெற்ற பலர் அரச, தனியார் துறையில் உயர் பதவிகளைப் பெறவும் தனது கற்பித்தல் மூலம் அடித்தளமிட்டிருந்தார்.
90 ற்கு முற்பட்ட காலப் பகுதிகளில் இருந்து 2017 ஆம் ஆண்டு வரை இவரிடம் கல்வி கற்ற ஆயிரக்கணக்கான மாணவர்கள் இன்று எமது சமூகத்தில் நல்ல நிலையில் உள்ளனர்.
கற்பித்தலில் மட்டுமன்றி கராத்தே உட்பட ஏனைய விளையாட்டுகளிலும், சமூக மேம்பாட்டு செயற்பாடுகளிலும் தன்னை ஈடுபடுத்தி கொண்டிருந்தார்.
சக்திவேல் சேரின் திடீர் மறைவு பதுளை சரஸ்வதி தேசிய கல்லூரியில் கல்வி கற்ற அனைத்து மாணவர்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
