தென்கிழக்கு ஆசிய நாடுகளுடனான இந்தியாவின் தொடர் உறவைப் பிரதிபலிக்கும் வகையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சிங்கப்பூர் பயணத்திற்குத் தயாராகி வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி செப்டம்பர் முதல் வாரத்தில் பிரதமர் மோடி சிங்கப்பூர் மற்றும் புருனே ஆகிய நாடுகளுக்குச் செல்லவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
13வது கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இருதரப்பு பயணமாக பிரதமர் மோடி கடந்த 2018ல் சிங்கப்பூர் சென்றார்.
இந்தியப் பிரதமரின் வருகைக்கு முன்னதாக சிங்கப்பூரில் கடந்த திங்கட்கிழமை இந்தியா-சிங்கப்பூர் அமைச்சர்கள் வட்ட மேசை மாநாட்டை இரண்டாவது தடவையாக நடத்தியது.
இதில் பல இந்திய மற்றும் சிங்கப்பூர் அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் இந்திய தரப்பிலிருந்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர், வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
சிங்கப்பூர் தரப்பில் துணைப் பிரதமர் கன் கிம் யோங், வெளியுறவுத்துறை டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், உள்துறை மற்றும் சட்ட அமைச்சர் கே. சண்முகம், டிஜிட்டல் வளர்ச்சி மற்றும் தகவல் அமைச்சர் ஜோசபின் தியோ, மனிதவள அமைச்சர் டாக்டர் டான் சீ லெங் மற்றும் போக்குவரத்து அமைச்சர் சீ ஹாங் டாட் ஆகியோர் அடங்குவர்.