முறைப்பாடு செய்ய வந்த சிறுமியை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில், குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட விதித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
சந்தேகநபருக்கு எதிராக சுமத்தப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளுக்கும் தலா 15 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி, தண்டனையை ஒரே நேரத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார்.
இதற்கு மேலதிகமாக பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 250,000 ரூபா நட்டஈடு வழங்குமாறும், வழங்காவிட்டால் அபராதமாக அதை அறவிடுவதாகவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அபராதம் செலுத்தாவிட்டால் இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்பதோடு, அபராத தொகைக்கு மேலதிகமாக 10,000 ரூபா அபராதமும் விதிக்கப்படுவதாகவும் அதை செலுத்தத் தவறினால் ஆறு மாத கடூழிய சிறைத்தண்டனையை அனுபவிக்க நேரிடும் எனவும் நீதிமன்றம் அறிவித்தது.
கல்கிஸை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் கான்ஸ்டபிளான இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவருக்கே இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் கல்கிஸை பொலிஸ் நிலையத்தில் பல்வேறு முறைப்பாட்டு பிரிவுகளில் கான்ஸ்டபிளாக கடமையாற்றியர் என்பதோடு,பாதிக்கப்பட்ட சிறுமி பக்கத்து வீட்டு பெண் தொடர்பில் முறைப்பாடு வழங்க தனது தாயுடன் பொலிஸ் நிலையத்திற்கு வருகைத் தந்துள்ளார். பின்னர் முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதாக கூறிய கான்ஸ்டபிள், சிறுமியின் தொலைபேசி எண்ணைப் பெற்றுக்கொண்டுள்ளார்.
பின்னர், இருவருக்கும் இடையே காதல் உறவு உருவானதுடன், குற்றம் சாட்டப்பட்டவர் சிறுமியுடன் பலமுறை உடலுறவு கொண்டுள்ளார்.
பின்னர் திருமணம் செய்துகொள்ள சிறுமி ஆர்வம் காட்டிய போது, குறித்த கான்ஸ்டபிள் அதற்கு மறுப்பு வெளியிட்டுள்ளார். இதனால் மனமுடைந்த சிறுமி தற்கொலை செய்யும் நோக்கத்தில் அளவுக்கு அதிகமாக மருந்தை அருந்தியுள்ள நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பின்னர் சிறுமியின் பெற்றோர் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு வழங்கியதைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தடயவியல் மருத்துவர் மற்றும் வழக்கின் பிற ஆதாரங்கள் மூலம் சந்தேகத்திற்கு இடமின்றி குற்றம் நிரூபிக்கப்பட்டதாக அறிவித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி, குற்றம் சாட்டப்பட்டவர் மூன்று குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளி என்று தீர்ப்பளித்தார்.