மலையகப் பகுதிகளில் இருந்து கொழும்புக்கு மரக்கறிகள் மற்றும் பழங்களை ரயிலில் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுக்கு அமைவாக மலையகப் பகுதிகளில் இருந்து கொழும்புக்கு மரக்கறிகள் மற்றும் பழங்களை ரயிலில் கொண்டு செல்லும் திட்டம் தொடர்பிலான விசேட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இதன்போது ஹாலிஎல, ஒஹிய, அம்பேவெல, பட்டிபொல, நானுஓயா போன்ற புகையிரத நிலையங்களை மத்திய நிலையமாக கொண்டு , தனியார் துறை நிறுவனங்களின் பங்களிப்புடன் மலையகப் பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் மரக்கறிகள் மற்றும் பழங்களை ரயில்வே திணைக்களம் சில சிறப்பு ரயில் பெட்டிகளைப் பயன்படுத்தி தலைநகரம் உள்ளிட்ட பிற பொருளாதார நியைங்களுக்கு தரமான முறையில் கொண்டு செல்வதற்கான வழிமுறைகள் குறித்து இதன் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதில்கலந்து கொண்ட போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன, திட்டத்திற்கு பங்களிப்புச் செய்யும் தனியார் துறை நிறுவனங்களின் அதிகாரிகளிடம் தற்போதைய நிலைமை குறித்து கேட்டறிந்தார்.
இதற்கமைய, தற்போது பயணிகள் போக்குவரத்தில் இருந்து நீக்கப்பட்ட ஐந்து ரயில் பெட்டிகள் மரக்கறிகள் மற்றும் பழங்கள் கொண்டு செல்வதற்கு ஏற்ற வகையில் நவீன மயப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை மரக்கறிகள் மற்றும் பழங்களை மிகவும் பாதுகாப்பான முறையில், குறைந்த விலையிலும், குறைந்த நேரத்திலும் கொண்டு செல்ல வேண்டியதன் அவசியத்தையும், சந்தைக்கு பொருட்களை விநியோகிக்கும் முகவர் பின்பற்றும் முறைகளையும் தெளிவுப்படுத்தினர்.
இதன்போது பெப்ரவரி மாதம் முதல் வாரத்திற்குள் நேரம், செலவுஇ விரயம் உள்ளிட்ட அனைத்து அம்சங்களிலும் கவனம் செலுத்தி, உரிய அறிக்கையை உடனடியாக தயாரித்து சமர்ப்பிக்குமாறு அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.