முட்டைகளை பயன்படுத்தி தயாரிக்கப்படும் கொத்து மற்றும் பிரைட் ரைஸ் போன்ற உணவு வகைகளின் விலைகளை குறைக்க அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி கொத்து மற்றும் பிரைட் ரைஸ் விலை 40 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது.
அத்துடன் முட்டை ரோல்ஸ் ஒன்றின் விலை 20 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதுடன், முட்டை சப்பாடு 40 ரூபாவாலும், முட்டை ரொட்டி 30 ரூபாவாலும் குறைக்கப்படவுள்ளன.
எவ்வாறாயினும், முட்டையின் விலை வீழ்ச்சியின் அடிப்படையில் பேக்கரி பொருட்களின் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படாது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, முட்டை ஒன்றின் விலை 27 அல்லது 28 ரூபாவாக குறைந்துள்ளமையினால் தாங்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக சிறு மற்றும் நடுத்தர முட்டை உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, பாரிய அரிசி ஆலை உரிமையாளர்கள் (28) செய்தியாளர் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்து புதிய ஜனாதிபதிக்கு ஆதரவாக அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலையில் அரிசியை சந்தைக்கு வெளியிட தீர்மானித்துள்ளதாக தெரிவித்தனர்.
இதேவேளை, பாரிய அரிசி ஆலை உரிமையாளர்கள் தமக்கு கட்டுப்பாட்டு விலையில் அரிசி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என சில்லறை விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறானதொரு பின்னணியில் விவசாயிகளுக்கான உர மானியத்தை 25,000 ரூபாவாக அதிகரிப்பது அரசியல் வாக்குறுதியுடன் மட்டுப்படுத்தப்படக் கூடாது என அனுராதபுரம் மாவட்ட மகா நீர்ப்பாசன கூட்டு விவசாயிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
இதேவேளை, பதுளை மாவட்டத்தில் உருளைக்கிழங்கு அறுவடைக்கு உரிய விலை கிடைக்கவில்லை என உருளைக்கிழங்கு விவசாயிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.