மஹர நகரம் பசுமை மற்றும் கலாச்சார நகரமாக அபிவிருத்தி செய்யப்படும். இது அடுத்த பத்து ஆண்டுகளில் செயல்படுத்தப்படும். நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் திரு.பிரசன்ன ரணதுங்க அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக நகர அபிவிருத்தி அதிகாரசபை இது தொடர்பான வரைவு அபிவிருத்தி திட்டத்தை தயாரித்துள்ளது.
மஹர நகர அபிவிருத்தித் திட்டத்தின் வரைபை மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளும் நிகழ்வு நேற்று (15) நகர அபிவிருத்தி அதிகார சபையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இங்கு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மஹர நகர அபிவிருத்தி திட்ட வரைபை மஹர பிரதேச சபையின் தவிசாளர் திருமதி சுதிமா சாந்தனியிடம் வழங்கினார்.
இந்த வரைவு மஹர பிரதேச சபையின் ஏனைய உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டு அவர்களினதும் மற்றும் பொதுமக்களின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்படும். அதற்கு 60 நாட்கள் அவகாசம் வழங்கப்படும். அதன் பின்னர், நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் மஹர நகர் அபிவிருத்தித் திட்டம் வர்த்தமானி மூலம் வெளியிடப்படும்.
விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரினால் நகர அபிவிருத்தி அதிகாரசபையானது, நகர அபிவிருத்தி பிரதேசமாக அறிவிக்கப்பட்டும். இது 1978 ஆம் ஆண்டின் 41 ஆம் இலக்க நகர அபிவிருத்தி அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் உள்ளது.
“கொழும்பின் பசுமை நகர்ப்புற பாரம்பரியம்” என்பது மஹர நகர அபிவிருத்தி திட்டத்தின் தொலைநோக்கு பார்வையாகும். நிலம் மற்றும் கட்டிட மேம்பாடு, பொருளாதாரம் மற்றும் சுற்றுலா மேம்பாடு, உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் நிலையான சுற்றுச்சூழல் மேம்பாடு ஆகிய 4 முக்கிய உத்திகளின் அடிப்படையில் மஹர நகரத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
மஹர என்பது மேற்கு மாகாணத்தின் கிழக்கு நகர்ப்புற பிரதேசமாகும். குடியிருப்பு பகுதி 48% ஆகும். இதன் அளவு 98 சதுர கிலோமீட்டர். கிராம அலுவலர் பிரிவுகளின் எண்ணிக்கை 92 ஆகும். மொத்த மக்கள் தொகை கிட்டத்தட்ட இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் ஆகும். 13 சிறிய ஏரிகள் மற்றும் நீர்த்தேக்கங்கள் இங்கு அமைந்துள்ளன.