இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியின்கீழ் மலையகத்தில் முன்னெடுக்கப்படும் வீடமைப்புத் திட்டம் சம்பந்தமாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் இன்று (16.02.2023) விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.
நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் மூவர் கலந்துகொண்டிருந்தனர்.
அத்துடன், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர், திட்டமிடல் பிரிவு அதிகாரிகள், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் பணிப்பாளர், புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் ஆகியோரும் சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.
மலையக மக்களுக்காக இந்தியா வழங்கிய 4 ஆயிரம் வீடுகள் திட்டத்தில் ஒரு சில பகுதிகளில் வீடமைப்புத் திட்டம் இன்னும் முழுமைப்படுத்தப்பாடமல் உள்ள நிலையில், அவற்றை பூர்த்தி செய்வதற்காக மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள் சம்பந்தமாக, இந்திய தூதரக அதிகாரிகளுக்கு அமைச்சர் ஜீவன் தொண்டமான் இதன்போது விளக்கமளித்தார்.
அத்துடன், இலங்கையின் தற்போதைய பொருளாதார சூழ்நிலைக்கமைய, முன்னதாக மதிப்பீடு செய்யப்பட்டதன் பிரகாரம் 10 ஆயிரம் வீட்டுத் திட்டத்தை முன்னெடுக்க முடியாதநிலை காணப்படுவதால், மேலதிகமாக தேவைப்படும் உதவிகள் சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டது.
முதலில் 4 ஆயிரம் வீட்டுத் திட்டத்தை முழுமைப்படுத்திய பின்னர், 10 ஆயிரம் வீட்டுத் திட்டத்தை ஆரம்பிப்பது சம்பந்தமாகவும், பயனாளிகள் தேர்வு குறித்தும் இச்சந்திப்பில் அவதானம் செலுத்தப்பட்டது.
அத்துடன், தொண்டமான் தொழில்பயிற்சி நிலையத்தின் செயற்பாடுகள், ஸ்மார்ட் வகுப்பறை திட்டம் தொடர்பாகவும் இரு தரப்புக்குமிடையில் கருத்தாடல்கள் இடம்பெற்றன.