மஹரகம அபேக்ஷா மருத்துவமனையின் மருந்துப் பொருட்களை திருடி அவற்றை புற்று நோயாளர்களுக்கே விற்பனை செய்த அதே மருத்துவமனையின் மருந்தாளர் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அபேக்ஷா வைத்தியசாலையில் சிகிச்சை பெற வரும் நோயாளர்களுக்கு மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறி 21,000 ரூபாவிற்கு மருந்துகளை விற்பனை செய்ய முற்பட்ட போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மஹரகமவில் உள்ள சந்தேகநபரின் வீட்டில் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் போது 425,970 ரூபா பணமும் மேலும் சில மருந்துகளும் குற்றப்புலணாய்வுப் பிரிவு அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட மருந்துப் பொருட்கள் அரச இலச்சினையுடன் கூடிய பெட்டிகளில் அடைக்கப்பட்டிருந்ததாகவும், இந்த வைத்தியசாலைக்கு நன்கொடையாளர்கள் வழங்கும் மருந்துகளுக்கு இந்த இலட்சினை பயன்படுத்தப்படுவதாகவும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.