பேரிடர் காலங்களில் பெருந்தோட்டங்களில் வசிக்கும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு அபாயத்தை எதிர்கொள்கின்றனர். இக்காலகட்டத்தில், உணவுப் பற்றாக்குறை, சுகாதார வசதிகள் கிடைக்காமை போன்ற காரணங்களால் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரிக்கக்கூடும். எனவே, பேரிடர் காலங்களிலும் அதற்கு பின்னரும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் ஊட்டச்சத்தை உறுதி செய்வது மிகவும் முக்கியமானதாகும்.
இயற்கை அனர்த்தத்தின் பின்னர் பலர் பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்; சிலர் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். இத்தகைய சூழ்நிலையில் கர்ப்பிணித் தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் ஊட்டச்சத்து தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும்.
சுகாதார அமைச்சின் அறிக்கைக்கமைய, 2025 ஆம் ஆண்டு பெருந்தோட்டப் பிரதேசங்களில் வாழும் குழந்தைகளில் 26 சதவீதமானோர் எடைக் குறைவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், நுவரெலியா மாவட்டத்தில் 17.4 சதவீதமான கர்ப்பிணித் தாய்மார்கள் எடை குறைவினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இத்தகைய சூழ்நிலையில் இவ்வனர்த்தம் மேலும் மோசமான நிலையை பெருந்தோட்டங்களில் ஏற்படுத்தும் என சுகாதாரத் திணைக்களம் எச்சரிக்கின்றது.
இதற்கு பிரதான காரணமாக இருப்பது உணவுப் பழக்கத்தில் ஏற்படும் திடீர் மாற்றமும், சூழல் மாற்றமுமாகும். கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் தமது எடையைத் தக்கவைத்துக் கொள்ளவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் போதுமான அளவில் ஊட்டச்சத்துக்கள் கிடைப்பது அவசியம். இதற்காக தினசரி புரதச்சத்து உணவுகளை உட்கொள்வது மிக முக்கியம். முட்டை ஒரு சிறந்த புரத உணவாக இருப்பதால், குறைந்தது நாளொன்றுக்கு ஒரு முட்டை உண்பதை உறுதிப்படுத்தினாலே போதுமானதாகும்.
அதே நேரம், சந்தர்ப்பம் இருந்தால் இறைச்சி, மீன், கருவாடு வகைகள் மற்றும் தானியங்கள் போன்ற பிற புரத உணவுகளையும் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. இவை உடல் எடையைத் தக்கவைக்கவும், உடல் வலிமையைப் பேணவும் உதவுகின்றன.
நோய் எதிர்ப்பு சக்திக்குத் தேவையான நுண் ஊட்டச்சத்துக்களைப் பெற காய்கறிகள், கீரை வகைகள் மற்றும் பழங்களை உண்பது அவசியம். இக்கட்டான சூழ்நிலையில் குறைந்தது நாளொன்றுக்கு இரண்டு வகையான காய்கறிகளையாவது உண்பது வேண்டும். அதேபோல், எளிதில் கிடைக்கும் உள்நாட்டு பழங்களையும் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. பொதுவாக பேரிடர் காலத்திலும் அதற்குப் பிந்தைய காலத்திலும் புரத உணவுகளை உட்கொள்ளும் அளவு குறைவடைவதை நாம் காண்கிறோம்.
ஆகவே, வீடுகளில் உள்ளவர்கள், உணவுக்கான உதவிகளை செய்பவர்கள், தற்காலிக தங்குமிடங்களில் பொறுப்பாக செயற்படுபவர்கள் ஆகியோர் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டும். இது எம் அனைவரினதும் பொறுப்பு என உணர்ந்து, இவர்களுக்கு உரிய கவனிப்புகளை வழங்க வேண்டும்.
குறிப்பாக பெருந்தோட்டப் பிரதேசங்களில் வாழும் மக்களிடையே புரதக் குறைப்பாடு பொதுவாகக் காணப்படும் பிரச்சினையாகும். எந்த வகையிலும் ஊட்டச்சத்துக்கு உதவாத பிஸ்கட், பால்மா, இனிப்புகள் போன்றவற்றைத் தவிர்த்து, ஊட்டச்சத்துமிக்க உணவுகளை வழங்கினால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய போஷாக்கு குறைபாட்டு பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும். அடிக்கடி பிள்ளைகளுக்கு இனிப்புகள், பிஸ்கட் வகைகள், பால்மா போன்றவை வழங்கப்படும் போது, அவர்களுக்கு பசி ஏற்படுவது குறைவடைகிறது; இதனால் சத்தான உணவுகளை உண்ணும் அளவும் குறைகிறது.
பேரிடர் காலங்களில் மக்களுக்கு அதிகளவில் பிஸ்கட் மற்றும் பால்மா வகைகள் கிடைப்பதால் அவை பிள்ளைகளுக்கு அதிகமாக வழங்கப்படுகின்றன. இதுவும் ஊட்டச்சத்து குறைபாட்டிற்கான முக்கிய காரணமாக அமைகிறது; மேலும் பிள்ளைகள் இவ்வகை உணவுப் பழக்கத்திற்கு ஆளாகிறார்கள். அதேநேரம், பேரிடருக்கு பின்னர் ஏற்படும் தொற்று நோய்களிலிருந்து பாதுகாப்பதற்கும் கீரை வகைகள் மற்றும் காய்கறிகளை உணவில் சேர்ப்பது அவசியமாகும்.
உதவிகளை செய்பவர்கள் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை வழங்குவது சிறப்பானது.
பெ. தினேஷ்குமார், சுகாதார மேம்பாட்டு அமைப்பு
