தனது பிள்ளையின் விடுகை பத்திரத்தை பெற்றுக் கொள்வதற்காக மனித உரிமை ஆணைக்குழு வரை சென்ற தாய்.
நுவரெலியா கல்வி வலயத்திலுள்ள கோட்டம் 2 இல் பாடசாலை ஒன்றில் கல்வி கற்ற தனது பிள்ளையை வேறொரு பாடசாலைக்கு மாற்றுவதற்காக பெற்றோர் விருப்பம் தெரிவித்த போதிலும் அந்த பாடசாலையின் அதிபர் அதற்கு இடம் கொடுக்கவில்லை. குறித்த பிள்ளையுடன் படித்த ஏனைய ஓரிரு மாணவர்களுக்கு விடுகை பத்திரம் கொடுத்த போதிலும் அந்த அதிபர் தனது பிள்ளைக்கு மாத்திரம் பல காரணங்களை கூறி மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். அதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட தாய் குறித்த பிரச்சனை தொடர்பில் கல்வி அதிகாரிகளிடம் எழுத்து மூலமாக முறைப்பாடுகளை கொண்டு சென்ற போதிலும், அவருக்கான தீர்வினை அதிகாரிகள் மற்றும் அதிபர் பெற்றுக் கொடுக்கவில்லை. குறித்த தாய் பல தடவைகள் பாடசாலைக்கு வந்து சென்றுள்ளார். தனது பிள்ளைகளை ஒரே பாடசாலையில் கல்வி கற்க வைக்க வேண்டும் என்ற ஆசையுடன் பொருளாதார ரீதியில் தன்னை சரிப்படுத்திக் கொள்ளும் வகையில் இந்த முடிவை எடுத்துள்ளார் ஆனால் சம்பந்தப்பட்ட பாடசாலையின் அதிபர் அதற்கு இடம் கொடுக்காது நடந்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து குறித்த பிள்ளையின் தாய் மாவட்டத்தின் மனித உரிமை ஸ்தாபனத்தின் அதிகாரி ஒருவரை தொடர்பு கொண்டு தனது பிரச்சினையை தெரிவித்துள்ளார். அதன் பின்னர் சம்பந்தப்பட்ட அதிகாரி பாடசாலையின் அதிபரை தொடர்பு கொண்டு குறித்த பிள்ளைக்கு விடுக பத்திரத்தை வழங்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். ஒரு பெற்றோர் தனது பிள்ளையை தனக்கு விருப்பமான பாடசாலையில் அனுமதிப்பதற்கான உரிமை எமது நாட்டில் இருந்து வரும் நிலையில் சம்பந்தப்பட்ட பாடசாலையின் அதிபர் தனது விருப்பத்திற்கு அமைய அடாவடித்தனமாக நடந்து கொள்வது ஏற்புடையது அல்ல என பலரும் விமர்சிக்கின்றனர். இவ்வாறு செயல்படும் ஓரிரு அதிபர்களால் ஒட்டுமொத்த அதிபர் சமூகத்துக்கே இழுக்கு ஏற்படுகிறது.
குறித்த பாடசாலையின் அதிபர் இது மாத்திரம் அல்லாது, பாடசாலைக்கு கிடைக்கும் பல நிதிகளை சரியான முறையில் பயன்படுத்தாமல் தனது தேவைக்காக பயன்படுத்தி வருவதாக பலரும் விமர்சிக்கின்றனர். மேலும் பாடசாலையின் சில ஆசிரியர்களுடன் தொடர்ச்சியான முரண்பாடுகளில் இருந்து வரும் அதே சமயம் பாடசாலைக்குள் தீர்க்க வேண்டிய பிரச்சினைகளை வெளி சமூகத்திற்கு கொண்டு சென்று பல்வேறு கடுமையான விமர்சனத்திற்கும் உள்ளாகியுள்ளார். ஆனால் இவர் தொடர்பான எந்த விதமான முறைப்பாடுகளையும் கல்வி அதிகாரிகள் ஏற்று அவருக்கு எதிரான விசாரணைகளை முன்னெடுக்கவில்லை என பாடசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புதிய மாணவர்களை அனுமதிக்கும் போதும் அரச சார்பற்ற நிறுவனங்கள் பாடசாலைக்கு உதவி செய்யும்போதும் கிடைக்கும் நிதியை சரியான முறையில் பயன்படுத்தி வருகின்றாரா என்பது தொடர்பில் பல சர்ச்சைகள் இருந்து வரும் நிலையில் அது தொடர்பான விசாரணைகளை எந்த ஒரு தரப்பினரும் உரிய முறையில் செய்யவில்லை என தெரியவந்துள்ளது.
குறித்த பாடசாலை அபிவிருத்தி அடைந்திருக்க வேண்டிய நிலையிலும் இன்று வரை அந்தப் பாடசாலையின் அபிவிருத்தி கேள்விக்குறியாக இருந்து வருகிறது. அத்தோடு பாடசாலையின் மாணவர்களையும் ஆசிரியர்களையும் அவர்களது சொத்துக்களையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் அந்த அதிபர், தனது தனிப்பட்ட தேவைகளுக்காகவும் சொத்துகளை பாதுகாக்கவும் தேவையான நடவடிக்கைகளை அதாவது பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் பாடசாலையின் ஒரு சில ஆசிரியர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
பாடசாலை ஒன்றின் ஆசிரியர்களை சரியான வகையில் நிர்வாக கடமைகளில் ஈடுபடுத்தி சுதந்திரமாக அவர்களை கற்றல் கற்பித்தல் மற்றும் இணைப்பாடு விதான செயல்பாடுகளில் ஈடுபட வைத்தால் அந்தப் பாடசாலையும் பாடசாலை மாணவர்களும் சிறந்த ஒரு இடத்திற்கு கொண்டு செல்லப்படுவார்கள் என்பது நடைமுறைக்கு சாத்தியமான விடயமே. இதனை உணராத இவர் போன்ற ஒரு சில அதிபர்களின் செயல்பாடுகள் காரணமாக மலையக கல்வி பல வருடங்கள் பின்னோக்கி சென்று கொண்டிருப்பதையும் அவதானிக்க கூடியதாக உள்ளது.
மேலும் ஆரம்ப பிரிவு மாணவர்களுக்காக அரசாங்கத்தினால் வழங்கும் காலை உணவு வேலை திட்டத்திலும் அதற்கு பொறுப்பான சமையலில் ஈடுபடும் நபர்களிடமிருந்து கமிஷன் பெறும் அதிபர்களும் நம் மத்தியில் இல்லாமல் இல்லை. அவர்களுக்கு உரிய நேரத்தில் உரிய கொடுப்பனவர்களை செய்ய தவறுவதும் அவர்களிடமிருந்து கமிஷன் பெற்றுக்கொண்டு காசோலைகளை வழங்குவதும் இவர் போன்ற அதிபர்களும் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். மலையக சமூகம் என்பது நாட்டின் பொருளாதார ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சமூகமாக திகழ்ந்து வரும் நிலையில், பொறுப்பான பதவிகளில் இருக்கும் நபர்கள் சமூகத்தின் எதிர்கால நலனை கருத்தைக் கொண்டு சமூக சிந்தனை உடன் செயற்பட வேண்டுமென பொதுமக்கள் பலரும் வேண்டுகோள் விடுகின்றனர்.
